Ads Here

Wednesday, June 12, 2013

இளவரசி ஷெரில்!

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சோம்பேறி. எவ்வளவு சொன்னாலும் ஒரு வேலைகூடச் செய்ய மாட்டாள். தாய் சொன்ன அறிவுரையை அவள் கேட்கவில்லை.
 
நாளாக ஆகத் தாய்க்கு சினம் மிகுதி ஆயிற்று.
 
ஒருநாள் மிகுந்த கோபத்தோடு ஷெரில் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வலி தாங்காமல் ஷெரில் "ஓ'வென்று அழுதாள்.
 
அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே ஓசை ஒன்று கேட்டது. அரசி ஒருத்தி அந்த வழியாக ஒரு பல்லக்கில் போய்க் கொண்டிருந்தாள். ஷெரில் எழுப்பிய அழுகுரல் கேட்ட அரசி, பல்லக்கை நிறுத்தினாள்.
 
""யாரோ அழுகிற ஓசை கேட்டேன்? யார் அது?'' என்றாள்.
 
பல்லக்கில் இருந்து இறங்கிய அவள், குடிசையின் கதவைத் தட்டினாள்.
 
தாய் வெளியே வந்தபோது, ""என்ன நடந்தது? யார் அழுவது?'' என்று கேட்டாள்.
அரசியைப் பார்த்தவுடன் அவள்.
 
""என் மகள் மிகவும் நல்லவள். நூல் நூற்பது போதும் என்றால் கேட்க மறுக் கிறாள். அதோடு, அவளை அப்படியே விட்டால், நூற்றுக்கொண்டே இருப்பாள். என்னிடம் அந்த அளவிற்குப் பஞ்சு இல்லை. நான் என்ன செய்வேன்?'' என்றாள்.
 
அரசி பார்த்தாள்.
 
""வியப்பாக இருக்கிறதே... எனக்குக் கூட நூற்பது பிடிக்கும். நூற்பு இயந்திரச் சக்கரம் சுழன்று கொண்டு இருப்பதை நான் விரும்புவேன். உங்கள் மகளை என்னோடு அரண்மனைக்கு அனுப்புங்கள். அவள் விரும்புகிற வரைக்கும் நூற்றுக்கொண்டே இருக்கட்டும். அங்கே பஞ்சுக்கு பஞ்சமே இல்லை,'' என்றாள்.
 
"ஷெரிலை எப்படியாவது துரத்தினால் போதும் என்று நினைத்த அவள்' அரசியோடு அவளை அனுப்பி விட்டாள்.
 
ஷெரில் அரண்மனைக்கு சென்றாள். ஒரு மாளிகையின் மேல்பகுதிக்கு அவளை அழைத்துச் சென்ற அரசி, அவளுக்கு ஓர் அறையைக் காட்டினாள். அது அவள் தங்குவதற்கு. பக்கத்தில் இரண்டு அறைகளில் மிகச்சிறந்த பஞ்சு மூட்டைகள் குவிந்திருந்தன.
 
அரசி அவளைப் பார்த்து, ""பெண்ணே, இங்கே நிறைய பஞ்சுப் பொதிகள் உள்ளன. இவற்றை நன்றாக நூற்றால், என் அன்பு மகனை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன். நீ ஏழைப் பெண் என்பதும், உன் தாய் தந்தையர் மிகவும் எளியவர் என்பதும் எனக்குத் தெரியும். அதற்காக, நான் உன்னை வெறுக்கமாட்டேன். உன் உழைப்பே உனது திறமை,'' என்று சொன்னாள்.
 
தனியே விடப்பட்ட ஷெரில், பஞ்சுப் பொதிகளைப் பார்த்து அஞ்சினாள். காலையில் இருந்து இரவு வரையில் நூற்றாலும் இவற்றை நூற்று முடிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இதை நினைத்தவுடன் அவளுக்கு அழுகையாக வந்தது. கன்னங்களில் நீர் வழிய ஷெரில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. வேலை செய்ய மனம் வரவில்லை.
 
மூன்றாம் நாள் அரசி வந்தபோது பஞ்சு அப்படியே இருந்தது. வியப்போடு, ""என்ன ஆயிற்று? ஏன் ஒன்றும் செய்யவில்லை?'' என்று கேட்டாள்.
 
அச்சம் கொண்ட ஷெரில், அரசியைப் பார்த்து மன்னிப்பு வேண்டினாள். வீட்டு நினைவும், தாயின் நினைவும் வந்ததால், வேலை செய்ய முடியவில்லை என்று சொன்னாள்.
 
அரசி, ""அப்படியா... ஆனால், நீ நாளைக்கு வேலையைத் தொடங்கி விட வேண்டும்,'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
 
தனிமையில் ஷெரில் மீண்டும் அழுதாள். முகத்தை மூடிய கைகளின் விரல்களைச் சற்றுத் தளர்த்தியபோது விரல்களின் இடையே மூன்று கிழவிகள் தன் எதிரே நிற்பதைப் பார்த்தாள். இதுவரை அப்படிப்பட்ட பெண்களை அவள் பார்த்ததில்லை. விந்தையான தோற்றத்தில் அவர்கள் இருந்தனர்.
 
முதல் கிழவியின் வலதுக்கால், ஏறத்தாழ அகன்ற சதுரமாக இருந்தது.
 
இண்டாவது கிழவியின் கீழ் உதடு, மோவாய்க் கட்டை வரை மிகவும் தொங்கி இருந்தது.
 
மூன்றாவது கிழவியின் கையின் கட்டை விரல் மண்வெட்டி போலப் பெரிதாக இருந்தது.
 
எதிரே நின்ற மூவரும் ஷெரிலைப் பார்த்து, ""உன் கவலை என்ன?'' என்று கேட்டனர்.
 
தன் நிலையை அவள் எடுத்துச் சொன்னாள்.
 
""எல்லாவற்றையும் நாங்கள் செய்து கொடுத்தால் எங்களுக்கு நீ என்ன தருவாய்?'' என்று அவர்கள் கேட்டனர்.
 
அவள் எதையும் தருவதற்குத் தயாராக இருந்தாள்.
 
பின்னர், அந்த மூவரும், ""உன் திருமணத்திற்கு எங்களை அழைக்க வேண்டும். அனைவரிடமும் இவர்கள் என் அத்தைகள் என்று அறிமுகம் செய்ய வேண்டும். எங்களோடு நீயும், உன் கணவனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்,'' என்றனர்.
 
எதைப்பற்றியும் எண்ணிப் பார்க்காமல், ஷெரில் ஒப்புக் கொண்டாள்.
 
மூன்று கிழவிகளும் தங்கள் வேலையைத் தொடங்கினர். முதல் கிழவி நூலைச் சக்கரத்தில் செலுத்திச் சுற்றிவிட்டாள். இரண்டாவது கிழவி நூலை எச்சிலால் ஈரமாக்கினாள். மூன்றாவது கிழவி மற்ற வேலைகளைச் செய்தாள்.
இப்படி மூவரும் வேலை செய்வதைக் கண்ட ஷெரில் வியப்புற்றாள். இதுவரை வேறு எவரும் இவ்வளவு வேகமாகவும், திறமையாகவும் வேலை செய்ததில்லை.
 
ஓசை கேட்டு மேலே வந்தாள் அரசி. அப்போது அருகிலிருந்த அலமாரியில் மூவரையும் ஒளித்து வைத்தாள்.
 
அரசி அவளது வேலையைக் கண்டு, மன நிறைவு கொண்டாள். அவளைப் பெரிதும் பாராட்டினாள்.
 
அரசி திரும்பிப் போன பிறகு அவர்கள் வெளியே வந்து வேலையைத் தொடர்ந்தனர். அவர்கள் இருப்பது அரசிக்குத் தெரியவே தெரியாது.
 
சில நாட்களில் இரண்டு அறைகளிலிருந்த பஞ்சு மூட்டைகளும் தீர்ந்துவிட்டன. வேலை முடிந்த பின்னர் ஒருநாள் மாலை இருட்டும் வேளையில் அந்த மூவரும் போய் விட்டனர். போகும்போது, ""பெண்ணே, நீ எங்களுக்குத் தந்த உறுதிமொழியை நினைவில் வைத்துக் கொள். நாங்கள் திரும்ப வருவோம்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.
 
அடுத்த நாள் காலை வழக்கப்படி அரசி வந்தாள். மூட்டை மூட்டையாக இருந்த பஞ்சு அனைத்தும் நூல் கண்டுகளாக மாறி இருந்தன. சொன்ன சொல் தவறாத அரசி, ஷெரிலின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
 
ஷெரில் அரசியைப் பார்த்து, ""எனக்கு மூன்று அத்தைகள் இருக்கின்றனர். என்னை மிகவும் அன்பாகப் போற்றி வளர்த்தவர்கள் அவர்கள். அவர்களைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டும்,'' என்றாள். அரசியும் ஒப்புக் கொண்டாள்.
திருமணம் நடந்தது. விருந்தின் போது மணமகன், மேஜையில் ஆடை அலங்காரத்துடன் அமர்ந்திருந்த அவர்களை, ""யார்' என்று கேட்டார். ஷெரில் அவர்களை அறிமுகப்படுத்தினாள்.
 
முதல் கிழவியைப் பார்த்து இளவரசன், ""உங்கள் பாதம் ஏன் இவ்வளவு பெரிதாக உள்ளது?'' என்று கேட்டான்.
 
""நான் எப்போதும் நூற்பு இயந்திரத்தைக் காலால் மிதிப்பதால்,'' என்றாள் அவள்.
 
இரண்டாமவளைப் பார்த்து, ""வியப்பாக இருக்கிறதே, இவ்வளவு நீண்ட உதடுகள். ஏன் இப்படி?'' என்று கேட்ட போது, அவள், ""எப்போதும் நூலை இதழால் தடவுவதால்,'' என்றாள்.
 
மூன்றாவது கிழவியைப் பார்த்து அவன், ""உங்களுக்கு இவ்வளவு பெரிய கட்டை விரல் எப்படி வந்தது?'' என்றான்.
 
அதற்கு அவள், ""என் வாழ்க்கை முழுவதும் நூல்களை அழுத்தி வேலை செய்வதால்,'' என்றாள்.
 
நூற்பதால் இந்தப் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று நினைத்தான் இளவரசன். தன் பக்கத்தில் இருந்த புதிய மனைவி யாகிய ஷெரிலைப் பார்த்து, ""இனிமேல் என் அழகிய இளவரசி ஷெரில் நூல் நூற்கவே கூடாது,'' என்று உத்தரவிட்டான்.
 
அன்று முதல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

நன்றி சிறுவர் மலர்

No comments:

Post a Comment