Ads Here

Tuesday, February 11, 2014

தென்னாலி ராமன் கதை

தென்னிந்தியாவில், தென்னாலி என்ற கிராமத்தில் ராமன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். ராமன் மிகவும் நல்லவன். எல்லோருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யும் நல்ல குணம் படைத்தவன்.

ஆனால், அவன் மிகவும் குறும்புக்காரன். மற்றவர்களைக் கேலி செய்வது அவனுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வீதியோரத்திலும், பூங்காக்களிலும் விளையாடிப் பொழுதை வீணாக்கி வந்தான்.

ஒருநாள், அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இமயமலைச் சாரலிலே பல வருடங்கள் கடும் தவம் புரிந்து, அரிய சித்திகள் பல பெற்றவர்; பல அபூர்வ சக்திகள் உடையவர்.

தென்னாலி ராமன் அவரை வணங்கினான். அவருக்குப் பல பணிவிடைகள் செய்தான். அவனது பக்தியையும், நேர்மையையும் கண்டு முனிவர் மனம் மகிழ்ந்தார். ஆனால், அவன் தன் நேரத்தை வீணாக்கித் திரிவதை அறிந்து கவலைப்பட்டார். ராமனை அருகே அழைத்தார்.

"மகனே, இந்தச் சிறு வயதில் நீ நல்ல பிள்ளையாகப் பள்ளிக்கூடம் சென்று படிக்காமல், உன் பொன்னான நாட்களை வீணாகக் கழித்து விட்டாய். 'சோம்பித் திரிபவர் தேம்பித் திரிவார்' என்பது பழமொழி. நீ சோம்பேறியாக இருக்காதே. அப்போதுதான் எதிர்காலத்தில் நீ உயர்ந்த நிலையை அடைய முடியும்" என்று புத்தி கூறினார்.

ராமன் அவரை அன்போடு வணங்கினான். "ஐயா, எனக்கு யாரையும் தெரியாது. இன்றுவரை யாரும் எனக்கு இப்படி நல்ல புத்தி சொன்னதில்லை. அதனால் இப்படியே வளர்ந்து விட்டேன். இனிமேல் நீங்கள் சொன்னபடி செய்வேன்" என்றான்.

"நல்லது, மகனே. நான் உனக்கு ஒரு மகத்தான மந்திரத்தைச் சொல்லித் தருவேன். இது மகா காளி மந்திரம். இந்தக் கிராமத்து எல்லையில், ஒரு மலை உச்சியில், எல்லைக் காளியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் இருக்கும் காளி தேவி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். நீ நாளை அதிகாலையில் அந்தக் கோயிலுக்குப் போ. அங்கே, காளி தேவியின் சந்நிதியில் அமர்ந்து, இந்த மந்திரத்தை இலட்சத்தி எட்டு முறை ஜபம் பண்ணு. அப்போது, காளி தேவி உன் முன்னே தோன்றி, நீ வேண்டும் வரத்தைத் தருவாள். உன் வாழ்க்கையில் நன்மை உண்டாகும்" என்று கூறினார்.

பின்னர், ராமனுக்கு அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டு, வேறு ஊருக்குப் பயணமானார்.

மறுநாள் அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்னர், ராமன் அந்த மலையில் ஏறினான். மலை உச்சியை அடைந்தான். அங்கே, ஒரு பழைய கோயில் இருந்தது. அந்தக் கோயிலின் கருவறையில் காளி தேவியின் உருவச் சிலை இருந்தது.

ராமன், தான் கொண்டு சென்ற மலர் மாலைகளை அந்தக் காளிதேவியின் சிலைக்கு அணிவித்தான்.

பின்னர், காளிதேவியின் சிலைமுன் அமர்ந்து, முனிவர் கற்றுக் கொடுத்த காளிதேவி மந்திரத்தைப் பயபக்தியுடன் உச்சரிக்கத் தொடங்கினான்.

ராமன் விடாமுயற்சியுடன் அந்த மந்திரத்தை இலட்சத்திஎட்டு முறை பக்தியுடன் உச்சரித்து முடித்தபோது, அந்த மலை நடுங்கியது. எங்கிருந்தோ 'கடகட' என்று சத்தம் கேட்டது.

அப்போது,...........

அவன்முன்னே இருந்த சிலை மறைந்தது. அங்கே, கண்களைப் பறிக்கும் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் காளிதேவி தோன்றினாள்.

அன்னை காளிதேவி ஆயிரம் முகங்களுடன், பார்ப்பவர்கள் பயந்து நடுங்கும் தோற்றத்தில் அங்கே காட்சியளித்தாள்.

ராமனைப் பார்த்து அன்புடன் சிரித்தாள்.

"குழந்தாய், உனது பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் " என்று கூறினாள்.

பக்தியுடன் தனது கைகளைக் குவித்துக் கொண்டு நின்ற ராமன், திடீரென்று சிரிக்கத் தொடங்கினான். குலுங்கக் குலுங்கச் சிரித்தான்.

காளி தேவி கடும் கோபம் கொண்டாள்.

"அடே, சிறு பயலே, இந்தக் கோலத்தில் என்னை வேறு யார் பார்த்தாலும், அஞ்சி நடுங்கி ஓடி விடுவார்கள். நீ வரத்தைக் கேட்காமல் கோமாளி போல் சிரிக்கிறாய். அதனால், நீ எதிர்காலத்தில் ஒரு கோமாளியாக, விகடகவியாக வாழ்வாயாக " என்று கூறினாள்.

ராமன் ஒரு கணம் சிந்தித்தான். " தாயே, அதுகூட நல்ல பெயராகத்தான் இருக்கிறது. ' வி - க - ட - க - வி'. விகடகவி. முன்புறமாகப் படித்தாலும், பின்புறமாகப் படித்தாலும், இது ஒரே மாதிரி ஒலிக்கும். நல்ல பெயர்தான், தாயே " என்றான்.

அவனது பணிவையும், அப்பாவித் தனத்தையும் கண்டு காளிதேவி மனம் இரங்கினாள். தன் கோபம் தணிந்தாள். " என்னைப் பார்த்து ஏன் சிரித்தாய்? சொல், குழந்தாய் " என்று கேட்டாள்.

ராமன் பக்தியுடன் பதில் கூறினான்.

"காளி அன்னையே, உனக்கு ஆயிரம் முகங்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டு கைகள்தான் இருக்கின்றன. எனக்கு ஒரு முகமும் இரண்டு கைகளும் இருக்கின்றன. எனக்குச் சளி பிடித்தால், எனது மூக்கைத் துடைக்க இந்த இரண்டு கைகளும் போதவில்லை. அப்படியிருக்க, ஆயிரம் முகங்களையுடைய உனக்குச் சளி பிடித்தால், இந்த இரண்டு கைகளால் சமாளிக்க முடியாமல் நீ எப்படிக் கஷ்டப்படுவாய் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது" என்றான்.

அவனது பதிலைக் கேட்டுக் காளி தேவிக்கும் சிரிப்பு வந்தது. அன்னை காளி தேவி தனது ஆயிரம் முகங்களாலும் அழகாகச் சிரித்தாள்.

ராமன் காளி தேவியின் தெய்வீகச் சிரிப்பின் அழகைப் பார்த்து மயங்கி நின்றான்.

"தாயே, உனது சிரிப்பு மிக அழகாக இருக்கிறது" என்று கூறினான்.

"மகனே, எப்போதுமே கோபமாகக் காட்சியளிக்கும் என்னையே நீ சிரிக்க வைத்து விட்டாய்.

இன்று முதல் உன் பெயர் 'தென்னாலி ராமன்' என்று வழங்கப்படும். நீ விஜயநகர மன்னனின் அரச சபையில் விகடகவியாக அமர்ந்து, உலகம் முழுவதையும் சிரிக்க வைப்பாய். புகழுடனும், பொருளுடனும் வாழ்வாய். உனது புகழ் என்றும் நிலைத்திருக்கும்" என்று ஆசி வழங்கியபின்னர், காளி தேவி மறைந்தாள்.

காளி தேவிக்கு நன்றி கூறியபின்னர், தென்னாலி ராமன் புறப்பட்டு, விஜயநகரத்துக்குச் சென்று, மன்னர் கிருஷ்ண தேவ ராயரைச் சந்தித்தான்.

அவனது புத்தி சாதுர்யத்தையும், எல்லாரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் திறமையையும் கண்ட விஜய நகர மன்னர், அவனுக்குத் தமது அரச சபையில் விகடகவியாகப் பதவி கொடுத்தார்

நன்றி சிறுவர் உலகம்

No comments:

Post a Comment