வேடன் ஒருவன், ஒரு ஆலமரத்தினடிக்கு வந்தான். வலையை விரித்து, அரிசியைத் தூவி வைத்தான். உடனே, அண்மையிலிருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டான்.
பறவைகள் வந்து வலையில் விழுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தான். அச்சமயம், புறாக்களுக்கு அரசனான சந்திரன், தன் பரிவாரங்களுடன், இரை தேடிக்கொண்டு அந்தப் பக்கமாக வந்தது. உடனே, அங்கு அரிசி இறைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கும்பலாய் இறங்கத் தொடங்கியது. ஆனால், அப்புறாக்களின் அரசன் அதைத் தடுத்தது.
""இந்த காட்டில், தானியம் எப்படி வரும்? நிச்சயம் இதை யாரோ இங்கு கொண்டு வந்து தெளித்திருக்க வேண்டும்! இதுபற்றி நாம் நன்கு தெரிந்து கொண்டாலொழிய, அந்தத் தானியத்தை தின்னக்கூடாது.''
""ஏனென்றால், ஒரு மனிதன், பொன் காப்புக்கு ஆசைப்பட்டு, எப்படி ஒரு புலியிடம் அகப்பட்டுக்கொண்டு மரணமடைந்தானோ, அதுபோல் இது ஏதோ விபரீதமாகத் தோன்றுகிறது,'' என்றது புறா அரசன்.
""அது என்ன கதை?'' என்று மற்ற புறாக்கள் கேட்க, புறா அரசன் சொல்லத் தொடங்கியது.
""நான், முன்பு ஒரு நாள், இரை தேடிக்கொண்டு இக்காட்டின் தெற்கே செல்லுகையில் அதைக் கண்டேன்...
அது ஒரு கிழப்புலி. மிகவும் வயதாகிவிட்டது. அங்குமிங்கும் ஓடி இரைதேட முடியாத நிலை. அதற்காக வயிறு பசிக்காமல் இருக்குமா? வேளா வேளைக்கு அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமே!
அது, வெகு நாட்களாக, ஒரு ஜதை பொன்காப்பு வைத்திருந்தது. அதை யாருக்காகிலும் கொடுத்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தது.
ஒருநாள், அக்கிழப்புலி, அங்கிருந்த ஒரு ஏரியில் நீராடிவிட்டு, கையில் காப்பை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. அந்தச் சமயம் பார்த்து ஒரு மனிதன், அக்கரைப் பக்கமாக வந்தான். அவனைக் கண்டதும், ""ஓ மனிதா! இதோ இந்தப் பொன் காப்புகளை வாங்கிக்கொண்டு போ!'' என்று இரைந்து சொல்லி, அந்தக் காப்புகளையும் எடுத்துக் காட்டியது.
அதுகேட்ட மனிதன், சற்று நின்றான்; ஆலோசித்தான். "இதோ, பொன்காப்பு நமக்கு வலிய கிடைக்கிறது! ஆனால், அதைக் கொடுப்பதோ ஒரு புலி! அது துஷ்ட மிருகமாயிற்றே! காப்பை வாங்க அதன் அருகில் சென்றதும், அது நம் மீது பாய்ந்துவிட்டால் என்ன செய்வது! என்ன தர்மசங்கடமான நிலை! அதற்காக, இந்தப் பொன்காப்பை கைவிடுவதற்கும் மனம் வரவில்லையே! என்ன செய்வது.
"உம் மரணம், இப்போது இல்லாவிட்டாலும் எப்போதோ ஒருநாள் வந்தே தீரப் போகிறது. அதைத் தடுக்க முடியுமா? ஆகையால், எப்படியும் இந்தப் பொன் காப்புகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்' என்றெல்லாம் யோசித்துத் தீர்மானித்தான் அவன்.
""ஓ புலியாரே! அது பொன் காப்புகள் தானா? நன்றாய்த் தூக்கிக் காட்டும் பார்ப்போம்.''
""ஓ! அது வேறு சந்தேகமா உமக்கு! இதோ நன்றாகப் பார்த்துச் சொல் மனிதா!'' என்று நன்றாய்த் தூக்கிக் காட்டியது.
""அது சரி! நீயோ புலி! உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை வேண்டுமே?''
""நானே கிழப்புலி... எனக்குப் பல்லும் கிடையாது, நகமும் கிடையாது. இன்னும் என் மீது நம்பிக்கை இல்லையா? வேண்டாம் என்றால் போ!'' என்றது.
""நீ சொல்வதெல்லாம் சரிதான்! இருந்தாலும், புலி பொல்லாதது! ஆளை பார்த்ததும் கொன்றுவிடும் என்று சொல்கிறார்களே! அதற்கு என்ன சொல்கிறாய்?''
""ஏதோ வறுமையில் வாடுபவனாய்த் தெரிந்தது. அதனால், உனக்கு இந்தப் பொன் காப்புகளைக் கொடுக்கத் தீர்மானித்தேன். இஷ்டம் என்றால் வாங்கிக்கோ. இல்லையென்றால் போய்விடு!''
அதுகேட்ட மனிதனுக்கு, மனம் குளிர்ந்தேவிட்டது. பேராசை யாரை விட்டது? அந்தப் புலியோ, தேனொழுகப் பேசியது! பிறகு நம்பாமல் இருக்க முடியுமா?
உடனே ஏரியில் இறங்கினான். பாதியில், அங்கிருந்த உளையில் அகப்பட்டுக்கொண்டு விழித்தான். ஒரு காலைத் தூக்க முயற்சித்தான். மற்றொரு கால் உள்ளே போய்க் கொண்டிருந்தது! பாவம்! அவன் என்ன செய்வான். "உளையில் மாட்டிக்கொண்டு விட்டேனே!' என்று தவித்தான்.
அதுகண்ட புலி, ""பயப்படாதே! இதோ நான் வருகிறேன். உன்னை அந்த உளையிலிருந்து காப்பாற்றுகிறேன்!'' என்று சொல்லிக்கொண்டே அவன் மேல் பாய்ந்து அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
அப்போது அந்தப் மனிதன்... "துஷ்டனின் துஷ்ட சுபாவம் மாறாது' என்பதை எண்ணியபடியே உயிரை விட்டான். ஆகையால், நாம் எதையும் மிகவும் ஆழ்ந்து யோசனை செய்த பிறகே செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நமக்கு ஒரு தீங்கும் ஏற்படாது!'' என்று கூறி முடித்தது அந்தப் புறா அரசன்.
ஆனால், அதுகேட்ட மற்ற புறாக்கள் சிணுங்கின. ""ஆமாம். இப்படியெல்லாம் யோசித்தால், நமக்கு ஒரு இரையும் அகப்படாது. மேலும், தீராத சந்தேகம் உள்ளவன், பெரும் துக்கத்தையே அனுபவிப்பான்,'' என்று சொல்லிக்கொண்டே, அத்தானியத்தைத் தின்ன கீழே இறங்கின.
புறா எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், அவ்வரிசியைக் கொத்தித் தின்னத் தொடங்கின. அப்போது, புறாக்கள் அனைத்தும் அவ்வலையில் சிக்கிக் கொண்டன.
""என் பேச்சைக் கேளாமற் போனீர்களே!'' என்று பெருமூச்சுவிட்டது அப்புறா அரசன்.
உடனே, "நான் மாத்திரம் தனியாயிருந்து என்ன பயன்!' என்று முணுமுணுத்துக் கொண்டே, கீழே இறங்கி வந்து வலையில் அகப்பட்டுக் கொண்டது.
இதைக் கண்ட வேடனும், மகிழ்ச்சியுடன் புறாக்களை பிடிக்க வந்தான். அதுகண்ட அரசனும், அதன் பரிவாரங்களும், பெரும் கலக்கம் அடைந்து, இறக்கைகளை அடித்துக் கொண்டு தவித்தன. அடுத்த நொடியில் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது புறா அரசன்.
உடனே மற்ற புறாக்களைப் பார்த்து, ""துன்பம் நேரும் காலத்தில் அறிவை இழப்பது கூடாது. அதிலிருந்து விடுபடவே முயல வேண்டும். அவனே களிப்பு அடைவான்.
""வேடன் நம்மை அணுகுவதற்கு முன், அனைவரும் ஒரே மனத்துடன், நாம் ஆகாயத்தில் பறக்க வேண்டும். அப்படி அனைவரும் கிளம்பினால், வலையும் பெயர்த்துக்கொண்டு நம்மோடு வந்துவிடும். அதன்பிறகு நாம் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.''
புறாக்கள் அனைத்தும் அரசன் சொற்படி, ஒரே சமயத்தில் உயரே கிளம்பின. வலையைத் தூக்கிக்கொண்டு அந்த புறாக்கள் ஆகாயத்தில் பறந்த காட்சி வேடன் எதிர்பாராதது. அவர்கள் பின்னால் சிறிது தூரம் ஓடினான். பிறகு, முடியாது என்று தெரிந்து, வலையும் போன சோகத்தில் வீடு திரும்பினான். புறாக்களின் அரசன், எலி நண்பனிடம் சென்று அவனது உதவியால் வலையை கடித்து விடுதலை அடைந்தனர்.
நன்றி சிறுவர்மலர்
No comments:
Post a Comment