கந்தசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.
""உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள்?'' என்று அன்புடன் கேட்டார்.
""இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்கு கிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறோம்,'' என்றனர்.
அவர்கள் துன்பத்தைப் போக்க வேண்டும், அந்தப் பண்ணையாருக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும் என்று நினைத்தார் கந்தசாமி.
""அந்த பண்ணையார் எப்படிப்பட்டவர்? அவரைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.
""அவர் சண்டைச் சேவல்கள் வைத்திருக்கிறார். எங்கே சேவல் சண்டை நடந்தாலும் அதில் அவர் கலந்து கொள்வார்,'' என்றான் அவர்களில் ஒருவன்.
""இந்தச் செய்தி எனக்குப் போதும். நான் சொல்வது போலச் செய்யுங்கள். உங்கள் துன்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன்,'' என்றார் கந்தசாமி.
""நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என்றனர்.
""எனக்கு ஒரு சண்டைச் சேவலும், இருநூறு பணமும் தேவை,'' என்றார்.
தன் திட்டத்தை அவர்களிடம் சொன்னார்.
உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து, இருநூறு பணம் திரட்டினர். ஒரு சண்டைச் சேவலையும் அவரிடம் தந்தனர்.
அவர்களில் நால்வரை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கந்தசாமி.
பண்ணையாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் கையில் சண்டைச் சேவல் இருந்தது.
பண்ணையாரை வணங்கிய அவர், ""ஐயா! சேவல் சண்டை என்றாலே உங்கள் பெயர் எங்கும் பரவி உள்ளது. நேற்று எங்கள் ஊரில் சேவல் சண்டை நடந்தது.
""அதில் உங்கள் பெயரைச் சொல்லி, இந்தச் சேவலை சண்டைக்கு விட்டேன். இந்தச் சேவல் வெற்றி பெற்று விட்டது. பரிசுப் பணமாக நூறு பணம் கிடைத்தது. உங்களால் கிடைத்த பரிசுப் பணம் இது. உங்களிடம் பணத்தைத் தர வந்தேன்,'' என்றார்.
பணத்தை அவரிடம் நீட்டினார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டார் பண்ணையார்.
""உன் சண்டைச் சேவல் நன்றாக உள்ளது. நல்ல பயற்சியும் தந்துள்ளாய். என் பெயரைச் சொல்லிப் போட்டியில் கலந்து கொள். மேலும், மேலும் உனக்கு வெற்றி கிடைக்கும்,'' என்று பாராட்டினார்.
அடுத்த வாரம் மீண்டும் அங்கு வந்தார் கந்தசாமி.
அவருடன் அந்த ஊரைச் சேர்ந்த வேறு நான்கு பேர் வந்திருந்தனர்.
பண்ணையாரை வணங்கிய அவர், ""உங்கள் பெயரைச் சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்று தந்தார்.
அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேருடன் பண்ணையாரிடம் வந்தார்.
அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.
இதை பார்த்த பண்ணையார், ""என்ன வெறுங்கையுடன் வந்திருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே?'' என்று கேட்டார்.
""நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பினேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.
இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம்தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும்,'' என்றார் கந்தசாமி.
""நீ தோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?'' என்று கோபத்துடன் கத்தினார் பண்ணையார்.
""சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். இதேபோலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?
""வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு. தோல்வி அடைந்தால் இழப்பு எனக்கா? இது என்ன நியாயம்? நீங்கள் பணத்தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்துவேன். உங்களிடமிருந்து, கட்டாயப்படுத்தி அந்த பொற்காசுகளை வாங்குவேன்,'' என்றார் கந்தசாமி.
அப்போதுதான் பண்ணையாருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டார்.
வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளை அவர்களிடம் தந்தார். "பேராசையினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே' என்று வருந்தினார் பண்ணையார்.
அந்தப் பொற்காசுகளை ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார் கந்தசாமி.
""அந்த பண்ணையாருக்கு இந்த அடி போதும்... இனி அவர் உங்களைத் துன்பப் படுத்த மாட்டார். மகிழ்ச்சியாக இருங்கள்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
நன்றி சிறுவர்மலர்
No comments:
Post a Comment