Ads Here

Friday, May 26, 2017

தேவதை கொடுத்த பரிசு!

நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர்.

அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை; மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

""நண்பனே, இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத் திற்கும் போதிய உணவுப் பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம்,'' என்றான் பிரகாஷ்.

""அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே.... நீயே எடுத்துக்கொள்,'' என்றான் ஜெகதீஸ்.

""இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றான் பிரகாஷ்.

""இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமை யில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன்,'' என்று அழுத்தமாகக் கூறினான் ஜெகதீஸ்.

பிரகாஷும், ஜெகதீஸும் ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர்.

""மீனவர்களே, என்ன அப்படிப் பார்க் கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இரு வரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப் பது போன்று தெரிகிறது. அது என்ன வென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன்,'' என்றாள் கடல் தேவதை.

""தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

""என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல் கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும் படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று!'' என்றான் பிரகாஷ்.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது.

""நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத் தின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இரு வருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன்,'' என்றது கடல் தேவதை.

பிறகு, பிரகாஷ் முன்பும், ஜெகதீஸ் முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள்.

இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன.

இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக் காரர்கள் ஆயினர்.

***

நன்றி தினமலர் சிறுவர்மலர்

No comments:

Post a Comment