ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது.
சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.
இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு இருந்தது. கிணற்றுச் சுவரின் மேல் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரைச் சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது.
கிணற்றின் உள்ளே ஓரமாக படியும் இருந்தது. அதன் வழியே மெதுவாக கீழே இறங்கிவிட்டது. பசுமையான புல்லை மேய்ந்து, தண்ணீரும் குடித்தது. கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்றது. சரி இனிமேல் மேலே செல்லலாம் என முயற்சி செய்து படிகளில் ஏறப் பார்த்தது. பாவம், அதனால் ஏற முடியவில்லை.
படிகளின் இடைவெளி அதிகமாகவும், உயரமாகவும் இருந்ததால் அதன் முன் கால்களை வைத்து மேலே ஏற முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கீழேயே விழுந்து விட்டது.
அதனால் கிணற்றின் மேலே ஏறிவர முடியவில்லையே என எண்ணி மிகவும் வேதனை அடைந்தது. தன் நிலையை நினைத்து, உள்ளே நின்று கத்திக் கொண்டே இருந்தது.
அந்த வழியே ஒரு குரங்கு வந்தது. கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் குரங்கின் காதில் விழுந்தது.
"கிணற்றுக்குள் இருந்து தானே ஆட்டின் சப்தம் வருகிறது' என நினைத்த குரங்கு, கிணற்றில் எட்டிப் பார்த்தது. கிணற்றின் உள்ளே ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும், ""எப்படி உள்ளே குதித்தாய்?'' எனக் கேட்டது.
""தண்ணீர் குடிக்கத்தான் இப்படி கிணற்றுக்குள் இறங்கினேன். ஆனால், மீண்டும் என்னால் ஏறி வர முடியவில்லை.''
அதைக் கேட்ட குரங்கால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை, ஆட்டுக் குட்டியின் நிலை கண்டு பரிதாபப்பட்டது.
""ஆட்டுக் குட்டியே... எந்தக் காரியத்தை செய்யும் முன், யோசித்த பின் செய்ய வேண்டும். ஆராயாமல் இப்படிச் செய்து விட்டு, சிரமப்படக் கூடாது. என்னாலும் உனக்கு உதவ முடியவில்லையே ... இருப்பினும் கிராமத்தினுள் சென்று துணைக்கு யாரையாவது அழைத்து வருகிறேன்...'' என்று கூறிச் சென்று விட்டது.
நீதி: கண்களுக்கு பார்த்ததும் அழகாக தோன்றுகின்ற எல்லாத்தையும் உடனே ஆசைபட்டுவிடக்கூடாது. அதைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டு தான் செயல்படணும். சரியா!
No comments:
Post a Comment