Ads Here

Wednesday, May 2, 2018

தொந்தி வயிறு கந்தசாமி

Image result for தொந்தி வயிறு


கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்இந்த கெளரவப் பிரசாதம்இதுவே எனக்குப் போதும் இதுதான் நம் கந்தசாமியோட தாரக மந்திரம். இவரை வெறும் கந்தசாமிண்ணா யாருக்கும் அவ்வளவு சுலபமாகத் தெரியாது. ஆனால் "தொந்தி வயிறு கந்தசாமி'' ண்ணா எல்லாருக்கும் சட்டென்று நினைவுக்கு வந்துடும். கல்யாண விருந்தில் கலந்துகிட்டு ஒரு பிடி பிடிக்கறதுதான் அவரோட வேலையே.

எங்கெல்லாம் கல்யாணம் நடக்குதோ அங்கெல்லாம் தொந்தி வயிறு கந்தசாமி ஆஜராயிருவாரு. மாப்பிள்ளை வீட்டாரோ பொண்ணு வீட்டாரோ கூப்பிடணுங்கற கட்டாயமெல்லாம் கந்தசாமிக்கு கிடையாது. அழையா விருந்தாளியாக அவர் அங்கிருப்பார். இவரை நல்ல தெரிஞ்சவங்க "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே அப்படீங்கற பழமொழியை "கந்தசாமி வருவார் பின்னே அவர் தொந்தி வயிறு வரும் முன்னே'' அப்படீங்கற புது மொழியாக மாத்திட்டாங்க

நெற்றி நிறைய விபூதியை பட்டைபோலத் தீட்டிக்கிட்டு, அஞ்சு முழ வேட்டியால் சட்டை தைச்சது போல ஒரு தொளபுள சட்டையைப் போட்டுக்கிட்டு, நீண்ட மரக்கால் கொடையையும் ஆட்டிக்கிட்டு நடந்து வருவாரு நம்ம தொந்தி வயிறு கந்தசாமி. சும்மா சொல்லக் கூடாது. அவரைப் பாக்கறவங்க அவர் ஏதோ முக்கிய பிரமுகர் அப்படீண்ணுதான் நினைப்பாங்க. பொண்ணு வீட்டுக்காரங்க இவரை மாப்பிள்ளை வீட்டுக்கு ஒறவுக்காரர்ணு நினைச்சு "வாங்க வாங்கண்ணு வாய் நிறைய வரவேற்று உபசரிப்பாங்க." மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோ பொண்ணு வீட்டுக்கு ரொம்ப வேண்டியவர்ணு நெனச்சு விழுந்து விழுந்து உபசரிப்பாங்க..

இரண்டு வீட்டுக்காரங்களும் சேந்து வந்தா என்ன செய்வார்ணு நீங்க கேட்கறது எனக்குப் புரியுது. அப்ப அவரு அவங்க இருக்கற பக்கமே திரும்பாம கண்ணில் பட்ட யார்கிட்டாயாவது தலைபோகிற முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசுறமாதிரி நடிப்பார்.

எல்லோரும் மணப்பெண்ணோட அலங்காரத்தைப் பத்தியோ பொண்ணு வீட்டுக்காரங்க போடப்போற சீர் பத்தியோ பேசிக்கொண்டிருப்பாங்க. ஆனா. தொந்தி வயிற்றுக்காரருக்கு அதிலெல்லாம் கொஞ்சமும் விருப்பம் கிடையாது. எத்தனை வகை பாயசம் போடுறாங்க? என்னென்ன உணவு வகைகளை பரிமாறுவாங்க? தலைமை சமையல்காரர் யாரு? அப்படீங்கற தகவல்களை விசாரித்துத் தெரிஞ்சுக்காட்டா அவருக்குத் தலையே வெடிச்சிடும். அப்படி தகவல்களைத் தெரிஞ்சுக்கும்போது கந்தசாமியோட வாயில ஒரு கப்பலே விடலாம்.

"கெட்டி மேளம் கெட்டி மேளம்''  அப்படீண்ணு பந்தலிலே முழங்கும் போது எல்லாரும் அட்சதை தூவி மணமக்களை ஆசீர்வதிச்சிட்டிருக்கும்போது கந்தசாமி பந்திக்கு முந்திக்கிட்டு சாப்பாட்டு அறையோட கதவுக்கு அருகில் முதல் ஆளாக நின்ணுகிட்டிருப்பாரு.

உணவு வகைகள் அடுக்கி வைச்சிருக்கும் மேசைக்கு பக்கத்திலுள்ள இடத்தில் உட்காரதுக்குத்தான் இந்த ஏற்பாடு. எந்த உணவுக்காகவும் காத்திருக்க வேண்டாமல்லவா?
ஒருமுறை ஒரு திருமண விருந்தில் உட்கார்ந்திருந்தார் நம்ம கந்தசாமி. பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு ஏற்கெனவே இவரைத் தெரியும். பந்தியில் நிக்கறவரைப் பாத்து "அவரைக் கொஞ்சம் கவனிச்சுக்குங்கப்பா'' அப்படீண்ணாரு பொண்ணோட அப்பா. அப்புறமென்ன கந்தசாமிக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

அருகில சாப்பிட்டுக்கிட்டிருந்தவங்ககூட அவங்க சாப்பிடுறதை நிறுத்திட்டு கந்தசாமி சாப்பிடுறதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிட்டாங்கணு பாத்துக்கங்களே.

நாக்கை சுழற்றிகிட்டு உணவுவகைகளை உள்ளே தள்ளிவிட்டுக்கிட்டிருந்தார். ஒரு பெரிய ஏப்பம் விட்டபடி சாப்பிட்டது போதும்ணு நெனச்சாரு தொந்தி வயிறு கந்தசாமி. அப்ப பார்த்து சிறப்பு உணவான பால் பாயசத்தோட வந்தார் பந்தியில விளம்பரவரு..

சாப்பாட்டை நிறுத்தத் தீருமானிச்சவர் ஒரு முறை அப்படியும் இப்படியும் அசைஞ்சாரு. விளம்பரவரடோ முகத்தைப் பார்த்தார். கந்தசாமிக்கு அருகே உட்காந்திட்டிருந்தவர் இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டிருந்தார். உங்க தொண்டைக்குழி வரைக்கும் சாப்பிட்டாச்சே எப்படி இந்த பால் பாயசம் எறங்கும்? " ணு வேடிக்கையாக கேட்டார்.

"இதென்ன பிரமாதம். மைதானத்திலெ கூட்டம் நிரம்பி வழிஞ்சாலும் தலைவர் வரும்போது தானா வழி கெடக்கறதை பார்த்திருக்கீங்கல்ல. அது மாதிரிதான் இதுவும். எவ்வளவு தான் வயிறு நிறைஞ்சாலும் சிறப்பு உணவு வரும் போது தானா வழி கிடைக்கும்'' அப்படீண்ணு சொல்லிட்டு பால் பாயஸத்தை ஒரு பிடி பிடிக்கத் தொடங்கினார் நம்ம தொந்தி வயிறு கந்தசாமி.

வேறொரு தடவை அவரு பந்தியில் உட்கார்ந்திருந்தார் எல்லாரும் சாப்பிடத் தொடங்கீட்டாங்க. யாருக்காவது கூட்டு அதிகமா வேணுமாண்ணு கேட்டுகிட்டே தூக்கோட வந்தாரு விளம்பரவரு. "பொரியல் பொரியல்'' ண்ணேட்டே வந்தாரு.

கந்தசாமி முகத்தைத் தூக்கிப்பாக்கறதைப் பாத்திட்டு பக்கத்துக்கு வந்து. "என்ன பெரியவரே கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?'' என்று கேட்டார்.

அதற்கு கந்தசாமியோ "இருந்தால் வேண்டா இல்லாட்டி வேணும்'' அப்படீண்ணாரு. விளம்பரவருக்கு ஒரே குழப்பமாக போயிருச்சு.. இருந்தால்தானே விளம்ப முடியும். இல்லாவிட்டி என்னால் எப்படி பரிமாற முடியும்ண்ணு நினைச்சார்.

"பெரியவரே எனக்குப் புரியலையே'' அப்படீண்ணாரு.

அதற்குத் தொந்தி வயிறு கந்தசாமி சிரித்துக்கிட்டே விளக்கம் சொன்னார். அது என்ன தெரியுமா. "என் தொந்தி வயிறு பெரிசா இருக்கறதாலே இலையிலே பொரியல் இருக்கா இல்லையாண்ணு கண்ணுக்குத் தெரியறதில்லை. இலையிலெ பொரியல் இருந்தா வேண்டாம் இல்லாட்டா வேணும்" அப்படீண்ணாரு.

இலையிலெ இருக்கற உணவுப் பண்டம் தெரியாதளவுக்கு அவரோட தொந்தி வயிறு இருந்தா அது எவ்வளவு பெரிசா இருக்கும்ணு நெனச்சுக்குங்க.

No comments:

Post a Comment