மான் குட்டி சுந்தருக்கு படிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அம்மா ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். அதனால் தினமும் பள்ளிக்கூடத்தை தாண்டி செல்லும் போதெல்லாம், பள்ளியை ஏக்கத்துடன் பார்ப்பான்.
அங்கு குட்டி குரங்குகள்,பூனைகள், நாய், நரி, ஓநாய், குட்டிகள் போனறவைகளெல்லாம் சந்தோசமாய் பள்ளிக்கு செல்லும்போது தான் மட்டும்
அம்மாவுடன் எப்பொழுதும் புல்லை மேய்ந்து கொண்டிருப்பது மான் குட்டி சுந்தருக்கு கவலையாக இருந்தது. அம்மாவிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது. அம்மா அதெல்லாம் நமக்கு வேண்டாம். நாம் இவர்களுடன் கலந்து கொண்டால் என்றாவது ஒரு நாள் உன்னை சாப்பிட்டு விடுவார்கள் என்று பயமுறுத்தியது.
மான் குட்டி சுந்தருக்கு இதனால் வருத்தம் பெருகிக்கொண்டே வந்தது. அந்த பள்ளியை நடத்திக்கொண்டிருந்தது கரடியார். அவர் தினமும் பள்ளிக்கு வந்து மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த பள்ளிக்கு ஆசிரியர்களாக, யானையாரும், ஒநாயும், இருந்தன. அவைகள் மிகுந்த கண்டிப்பானவைகள். அதனால்
குரங்கு குட்டிகள் கூட தன் வாலை சுருட்டி வைத்து அடக்கமாய் இருந்தன.
ஒரு நாள் யதேச்சையாக கரடியாரை மான் குட்டி சுந்தர் சந்தித்தது. அது தான் படிக்க வேண்டும் என்ற ஆசையை கரடியாரிடம் சொன்னது. கரடியாரும் நாளையில் இருந்து பள்ளிக்கு வா என்று சொன்னது. அம்மா என்னை அனுப்ப மறுக்கிறாள் என்று கரடியாரிடம் சொல்ல, கரடியாரும் நான் உன் அம்மாவிடம் பேசுகிறேன் என்றது.
அது போல் மறு நாள் கரடியார் அம்மா மானை சந்தித்து இந்த காலத்தில் படிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்று எடுத்து சொன்னது. அம்மா மான் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை, காரணம் கேட்டதற்கு படித்து கொண்டிருப்பவைகள் எல்லாம் மாமிச உண்ணிகள், அப்படியிருக்க என் குழந்தையை எப்படி நம்பி அனுப்புவது என்று சொன்னது.
அதை கேட்ட கரடி அப்படியானால் யானை எப்படி அவர்களுக்கு பாடம் எடுக்கிறது? என்று கேட்டது. அம்மா மான் யானை மிக பெரிய விலங்கு, அது மட்டுமல்லாமல் மிகுந்த பலசாலி கூட, அதனால் எல்லா மிருகங்களும் அதற்கு பயப்பட்டு ஒழுங்காக இருக்கின்றன. என்றது. கரடியார் அந்த யானையையே உன் மான் குட்டிக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லுகிறேன், என்ன சொல்லுகிறாய் என்று கேட்டது.
அம்மா மான் கடைசியாக ஒத்துக்கொண்டது. மான் குட்டி சுந்தருக்கு ஒரே மகிழ்ச்சி. நாளையில் இருந்து நானும் பள்ளிக்கு போகிறேன் என்று போவோர் வருவோர் எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தது.
மான் குட்டி சுந்தர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டன. அங்கெல்லாம் மனிதர்களை போல் பனிரெண்டு வருடங்கள் அடிப்படை கல்வி கற்க வேண்டியதில்லை. காரணம், மனிதனை போல் ஐம்பது ஆறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது என்பது யானை, மற்றும் ஒரு சில மிருகங்கள்தான்.
மற்றவைகளெல்லாம், பத்து பன்னிரெண்டு வருடங்கள் வாழ்நாளையே கொண்டிருக்கும்.
அதனால் ஒரு வருட படிப்பு முடிந்தாலே அது பனிரெண்டு வகுப்பு முடித்தற்க்கு சமம். மான் குட்டி சுந்தர் ஒரு வருட படிப்பு முடிந்தவுடன், கரடியாரை சந்தித்தது.
கரடியார் மான் குட்டி சுந்தரை பாராட்டி நீ நன்றாக படித்து முடித்து விட்டாய், நல்ல அறிவாளியாகவும் ஆகி விட்டாய். நீ ஏன் மருத்துவம் படிக்க கூடாது என்று கேட்டது.எனக்கும் ஆசைதான், அம்மா ஒத்துக்கொள்ள வேண்டுமே என்று சொன்னது. நீ கவலை படாதே, நான் உன் அம்மாவிடம் பேசுகிறேன் என்று கரடியார் சொன்னது.
சொன்னது போலவே மான் குட்டி சுந்தரை தன் சொந்த பாதுகாப்பில் காட்டுக்குள் தொலை தூரத்தில் உள்ள மருத்துவர் நரியாரிடம் மருத்துவம் கற்க அனுப்பிடயது. மான் குட்டி சுந்தரும் அங்கு ஒரு வருடம் நல்ல முறையில் வைத்தியம் கற்று இங்கு வந்து சேர்ந்தது. கரடியார் அதை பாராட்டி இங்குள்ள மிருகங்களுக்கு நீதான் இனி வைத்தியர் என்று சொல்லி ஒரு வைத்திய சாலையையும் நிறுவி கொடுத்தது
இப்பொழுது மான் குட்டி சுந்தர் வைத்தியர் ஆகி விட்டார். நாமும் அதனை வைத்தியர் சுந்தர் என்று அழைப்போம்.
ஒரு நாள் மான் குட்டி வைத்தியர் சுந்தர் காட்டுக்குள் மூலிகைகளை பறித்துக்கொண்டிருந்த பொழுது ஒரு மிருகத்தின் கூக்குரல் கேட்டது. அந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த்து. அங்கு புலி ஒன்று வரிக்குதிரைய பிடித்து கொல்வதற்காக தயாராக இருந்தது.அருகில வரிக்குதிரையின் குட்டி அம்மாவை காப்பாற்ற முடியாமல் கதறிக்கொண்டிருந்த்து.
இதை பார்த்த வைத்தியர் மான் குட்டி சுந்தர், நேராக புலியிடம் சென்று நீங்கள் செய்வது நியாம் இல்லை, ஒரு குட்டியை வைத்திருக்கும் தாயை கொல்லலாமா? என்று கேட்டது.
நீ யாரடா என்னை கேட்பது? என்று மிரட்டியது புலி. ஐயா நான் இந்த காட்டின் வைத்தியர் என்று சொன்னது. உடனே புலி வைத்தியரா? என்று மேலும் கீழும் பார்த்தது.உங்களுக்கு சந்தேகம் என்றால் நம் கரடியாரிடம் கேளுங்கள் என்றூ சொன்னது மான் குட்டி சுந்தர். அதெல்லாம் வேண்டாம், நான் இந்த வரிக்குதிரையை என் குட்டிகளுக்கு கொண்டு போகலாம் என்று இருந்தேன். நீ வைத்தியர் என்றால் எனக்கு காரியம் ஒன்று ஆக வேண்டி இருக்கிறது. அங்கு என் குட்டிகளில் ஒன்று இரண்டு நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறான், அவனை கவனிக்க வேண்டும், வருகிறாயா? நான் வருகிறேன், ஆனால் இந்த வரிக்குதிரையை நீங்கள் விட்டு விட வேண்டும். சரி உனக்காக இல்லை, உன் வைத்தியத்துக்காக இந்த வரிக்குதிரையை,விட்டு விடுகிறேன். சொன்னதும் அதன் பிடியில் இருந்து தப்பித்த வரிக்குதிரை மான் குட்டி சுந்தரிடன் வந்து மிக்க நன்றி ! ஆனால் நீ அதன் இடத்துக்கு போய் மாட்டிக்கொள்ள போகிறாய் என்று எனக்கு கவலையாக இருக்கிறது என்றது. என்னை பற்றி கவலை படாதே. நீ சீக்கிரம் உன் குட்டியை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போய் விடு என்றது.
புலியுடன் அவர் குகைக்கு சென்ற மான்குட்டி சுந்தர் அங்கு இருந்த புலிக்குட்டியில் ஒன்றுக்கு கடுமையான சுரம் வந்திருப்பதை கண்டு கொண்டது. உடனே புலியாரிடம் ஐயா, உங்கள் குட்டிகளில் ஒன்றுக்கு கடுமயான சுரம் வந்துள்ளது. இதற்கு மருந்து மூலிகையாக என்னிடம் உள்ளது. ஆனால் நீங்கள் இதன் இலைகளை சாப்பிடமாட்டீர்கள், அதனால் நான் ஒரு உபாயம் செகிறேன், என்று
அங்கிருந்த ஒரு குட்டைக்கு சென்றது. அதில் அந்த மூலிகையை நன்கு கசக்கி அந்த தண்ணீரில் கலக்கி விட்டது.இப்பொழுது அந்த குட்டியை அந்த தண்ணீரை பருக சொன்னது.
இப்படியே இரண்டு முறை மருந்தை கலக்கி தண்ணீரை குடிக்க வைத்ததால் காய்ச்சல் கொஞ்சம் குணமாகி அந்த குட்டி எழுந்து நடமாட ஆரம்பித்த்து. புலிக்கு ஒரே சந்தோசம். மான் குட்டி சுந்தரை பார்த்து உன்னை கடைசியில் அடித்து சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால் நீ ஒரு திறமையான வைத்தியன் என்று நிருபித்து விட்டாய். உன்னை நான் கொல்ல நினைப்பது பாவம், என்னை போல மற்ற விலங்குகளுக்கும் உன்னால் முடிந்த அளவு வைத்தியம் செய்து காப்பாற்று, என்று கூறி அதனை மகிழ்வுடன் வழி அனுப்பி வைத்தது.
No comments:
Post a Comment