Ads Here

Thursday, May 3, 2018

காட்டுக்குள் சுற்றுலா

அன்று காலை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியர்  “அடுத்த மாதம் பத்தாம் தேதி நாம் எல்லோரும் சுற்றுலா போகப்போறோம்” என்று அறிவித்தார். உடனே மாணவ மாணவிகள் “ஹோய்” என்று கூச்சலிட்டனர். 

சார் எத்தனை நாள் சார்? ஒரு மாணவன் கேட்டான்


சார் சார் எந்த ஊருக்கு சார் ஒரு மாணவி கேட்டாள்

பொறுங்கள் பொறுங்கள், சொல்லிவிட்டு நிறுத்திய வகுப்பாசிரியர் சுற்றுலான்னு சொன்னவுடனே நீங்க வெளி மாநிலமோ,இல்லை,நம்ம ஊர்களுக்கோ போகப்போறோமுன்னு நினைச்சுக்காதீங்க.


அவர் இப்படி சொன்னவுடன் மாணவ மாணவிகள் ஒன்றும் புரியாமல் அவரை பார்த்தனர்.

இந்த சுற்றுலா முழுக்க முழுக்க உங்களுக்கு இன்னொரு உலகம் இருக்கு அப்படீங்கறதை புரிஞ்சுக்கறதுக்காகத்தான்.


மீண்டும் மாணவ மாணவிகள் குழம்பிக்கொண்டார்கள்.

ஆசிரியர் மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டார். இந்த சுற்றுலாவுக்கு வரணும்னா, நீங்க குறைஞ்சது ஆறு கிலோ மீட்டர் நடக்கவேண்டி இருக்கும். இன்னொன்னு வழியில உங்களுக்கு ஆபத்து கூட ஏற்படலாம்.


அவ்வளவுதான் மாணவ மாணவிகள் மத்தியில் அப்படியே அமைதி…’ஐயோ ஆபத்தா’ ஆறு கிலோ மீட்டர் நடக்கணுமா? பல மாணவர்களும்,மாணவிகளும் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். பலர் நான் வரலையப்பா இந்த சுற்றுலாவுக்கு அவர்களுக்குள் முணங்கிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.


ஆனால் பல மாணவ மாணவிகள் உற்சாகமாகி விட்டனர், சார் எதுவானாலும் நாங்க ரெடி..நீங்க சொல்லுங்க சார்.


“குட்..இந்த ஸ்போர்ட்டிவத்தான்” நான் எதிர்பார்த்தேன். நாம எல்லாரும் இந்த நகரத்துலயே பிறந்து வளர்ந்து மறைஞ்சு போறோம். நமக்கு இந்த பரபரப்பு, மக்கள் நடமாட்டம், சத்தம் இதெல்லாம்தான் உலகம் அப்படீன்னு நினைச்சு வாழ்ந்திட்டோம்.


உங்களுக்கு ஒரு உண்மையை சொல்றேன். இந்த உலகத்துல மனிதர்கள் வாழற உலகத்தை விட அற்புதமான உலகம் இரண்டு இருக்கு அது என்னன்னு தெரியுமா?

மாணவர்கள் இப்பொழுது ஆசிரியரின் உரையை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.


ஆசிரியர் உரையை தொடர்ந்தார். ஆம் காட்டில் வாழும் உயிரின்ங்களின் உலகம் ஒன்று, இரண்டாவது கடலில் வாழும் உயிரினங்களின் உலகம். இது இரண்டும் அற்புதமான உலகம். அங்கு அவசரம் இல்லை, ஆர்ப்பாட்டம் இல்லை, நீ பெரியவனா நான் பெரியவனா அப்படீங்கற போட்டி இல்லை.சொல்லி விட்டு நிறுத்தியவர், இன்னொன்னு தெரியுமா உங்களுக்கு, காட்டில் வாழும் மிருகங்கள் உலகம் அப்படீன்னு சொன்னேனில்லை, அதுல மனுசனும் அடக்கம், சொல்லி நிறுத்தியவரிடம்

மாணவர்கள் சார் மனிதர்களும் அடக்கமா? அது எப்படி சார்?

உண்மைதான், அந்த காட்டுக்குள்ளும் மனுசங்க வாழ்ந்து கிட்டுதான் இருக்காங்க ஆனா அவங்க நம்மளை மாதிரியெல்லாம் வாழ மாட்டாங்க. இயற்கையோடு கலந்துதான் வாழறாங்க.

அடுத்து இந்த பள்ளி பருவத்தை முடிக்கப்போற வயசுல இருக்கற நீங்க காட்டை பத்தியும், அங்குள்ள விலங்குகளோட வாழ்க்கை முறைகளையும் மனுசங்க வாழ்க்கை முறையையும் தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்படறேன். அதுக்காக இந்த சுற்றுலா.


அப்ப நாம் காட்டுக்கு போகப்போறோமா சார்?


ஆமா நாம இங்கிருந்து பொள்ளாச்சி போய் அங்கிருந்து வால்பாறை போற வழியில அட்டகட்டி, ஆழியாறு, காடம்பாறை, அப்படீங்கற ஊர்களுக்கு போக போறோம். அது முழுக்க முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கற ஊர். அவங்க கிட்ட அனுமதி வாங்கி ஒரு நாள் அங்க தங்கி அந்த காட்டுல இருக்கற வாழ்க்கையை தெரிஞ்சுக்க போறோம்.


“ஹோ ஹொ” மாணவ மாணவிகள் மீண்டும் உற்சாகமாய் கூவினர்.


வால்பாறை மலை அடிவாரத்திலேயே வனத்துறை அலுவலர்களால் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கபட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் கொண்டு போக்க்கூடாது. தீ பிடிக்கற பொருட்கள் எதுவும் வச்சிருக்கக்கூடாது. அது மட்டுமல்ல இந்த வனத்துறைக்குள்ள யாருக்கும் அனுமதி இல்லை. உங்களுக்காக ஒருத்தர் “ஸ்பெசலா” டெல்லியில இருந்து அனுமதி வாங்கிட்டு வந்ததுனால அனுமதி கொடுக்கறோம். இப்ப உங்க கூட ஒருத்தர் வருவார். அவருதான் உங்களுக்கு பாதுகாவலாராகவும், வழி காட்டியாகவும் இருப்பார்..


மாணவ மாணவிகளிடம் இருபத்தி ஐந்து வயது வாலிபர் தன்னை பாதுகாவலர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் இந்த ஊர்ல வசிக்கற காட்டு மக்கள்ல ஒருத்தன்.


மாணவர்கள் நம்ப மறுத்தனர். பார்க்க நாகரிகமாய் இருந்தார். நல்ல உடை அணிந்து இருந்தார். அதனால் நம்பாமல் அவரை பார்த்தனர்.


நம்புங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் வந்த வாகனத்தை ஒரு வளைவில் நிறுத்த சொல்லி விட்டு அனைவரும் அமைதியாய் என்னோடு நடந்து வாருங்கள்.


வண்டி ஓட்டுநரிடம் நீங்கள் மெதுவாக பின்னால் வாருங்கள், நாங்கள் முன்னால் நடக்கிறோம் என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். மாணவ மாணவிகளும் அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தனர்.


அவர் வண்டிப்பாதையில் நடக்காமல் விலங்குகள் நடந்து செல்லும் ஒற்றை அடி பாதை வழியாக கூட்டி சென்றார்.


அமைதி…அமைதி..மரங்களும் செடிகளும் அடர்த்தியாய் இருக்க, கூக்கூ..

கீச்..கீச்.. இந்த சத்தம் மட்டும் கேட்டது. அதுவரை சல சல வென பேசிக்கொண்டு வந்த மாணவ மாணவிகள் இந்த அமைதியை கண்டு பயந்து அப்படியே அமைதி ஆகி விட்டனர்.


தட்..தட்..இவர்கள் நடந்து செல்லும் சத்தம் தவிர எந்த சத்தமும் இல்லை. திடீரென முன்னால் நடந்து சென்ற வழிகாட்டி திரும்பி அப்படியே எல்லாரும் உட்காருங்கள் குயிக்..சொல்லிவிட்டு உட்கார மாணவ மாணவிகள் என்ன ஏது என்று தெரியாமல் அப்படியே கீழே உட்கார்ந்தனர்.

இரண்டு நிமிடங்களில் அவர்கள் தலைக்கு மேல் தேனீ கூட்டம் ஒன்று ர்…ர்ர்..என்று பறந்து சென்றது. அது சென்ற இரண்டு நிமிடம் கழித்து இப்பொழுது எல்லோரும் எழுந்திருங்கள் என்று சொல்லி அவரும் எழுந்தார். பின் மாணவர்களிடம் பார்த்தீர்களா இந்த தேனீக்கள் கூட்டமாய் வேகமாய் பறந்து செல்லும். வழியில் நீங்கள் அதை மறிப்பது போல் நின்றால் உடனே உங்களை சுற்றி கொட்ட ஆரம்பித்து விடும். இவர்களுக்கும் இப்பொழுதுதான் புரிந்தது நம்மை ஏன் உட்கார சொன்னார் என்று.


      சட்டென நின்றவர் நீங்கள் இந்த மரங்களுக்கு நடுவில் வந்து கொண்டிருக்கிறீர்களல்லவா? இது என்ன மரம்? கேட்டவுடன் மாணவர்கள் அந்த மரத்தை மேலே அண்ணாந்து பார்த்து ஆளுக்கொரு மரத்தின் பேரை சொல்ல ஒரு மாணவன் “தேக்கு” என்றான். “குட்” இது தேக்குதான், பாருங்கள் இதன் இலை எவ்வளவு அகலம் இருக்கிறதென்று. மாணவர்கள் ஆவலுடன் பார்க்க இது என்ன மரம் தெரியுமா? என்று இன்னொரு மரத்தை சுட்டி காண்பித்தார். மாணவர்கள் புரியாமல் பார்க்க இது “சந்தன மரம்” என்றவுடன் அனைவருக்கும் ஆச்சர்யம் சந்தனமா, உடனே முகர்ந்து பார்த்து சார் சந்தனம் வாசமே இல்லை சொன்னவுடன் அவர் சிரித்துக்கொண்டு, இது இன்னும் பக்குவம் வரவில்லை. நன்கு வளர்ந்து முதிர்ந்த பின்னால்தான் அதன் வாசம் நமக்கு தெரியும். சொல்லிக்கொண்டு வந்தவர் சட்டென கையை விரித்து அப்படியே நில்லுங்கள்..சொல்லி விட்டு கீழே இருந்த சாணத்தை காட்டினார். மாணவர்களில் ஒரு சிலர் அந்த சாணத்தை தொட்டு பார்த்தனர். சார் கொஞ்சம் சூடா இருக்கு.


உடனே இவர் யாரும் சத்தம் போடாதீர்கள், இது யானை சாணம் இதை போட்டு இரண்டு மூன்று மணி நேரம்தான் ஆகியிருக்கும், அதனால் யானை இங்கு எங்கோதான் இருக்கும், சொன்னவுடன் பயத்தில் அப்படியே உறைந்து போனார்கள் மாணவ மாணவிகள்.


      யானை இங்கே எங்கோதான் இருக்கும் ! இந்த வார்த்தையை கேட்டு ஒவ்வொருவரும் இறுக்கி பிடித்துக்கொண்டு சுற்று முற்றும் பார்த்து அவரை பின் தொடர்ந்தனர். கொஞ்ச தூரம் நடந்தவுடன் சல..சல..வென சத்தம் கேட்க இவர் அவர்களை மெதுவாக வாங்க. இங்க ஒரு சிற்றாறு ஓடுது.


எல்லோரும் அந்த ஆற்றை பார்த்து அப்ப்டியே நின்றனர். தண்ணீர் பளிங்கு போல ஓடிக்கொண்டிருந்தது.


பார்த்தீர்களா, இந்த தண்ணீர் காட்டு வழியே ஓடி வருவதால் வழியில் உள்ள மூலிகைகளை கழுவிக்கொண்டு வரும். அதனால் இந்த தண்ணீர் உடலுக்கு ஆரோக்கியமானது. சொன்னவர் அனைவரையும் இங்கு உட்கார்ந்து ஓய்வு எடுங்கள்


இது வரை இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து வந்து விட்டீர்கள். என்று சொன்னார்கள். இவர்கள் நமபவே இல்லை, சார் அவ்வளவு தூரம் நடந்துட்டமா எப்படி?


அவர் சிரித்துக்கொண்டே உங்கள் எல்லோருக்கும், பயம், ஆர்வம், மகிழ்ச்சி, திகில் எல்லாம் சேர்ந்து கொண்டதால் இவ்வளவு தூரம் நடந்து வந்தது, உங்களுக்கு களைப்பை தரவில்லை என்றார். உண்மைதான் என்று மாணவர்கள் ஒப்பு கொண்டனர்.


      தண்ணீருக்குள் காலை நனைத்து விளையாண்டு கொண்டிருந்த ஒரு மாணவி வீல் என்று கூச்சலிட எல்லோரும் ஓடி போய் பார்த்தனர். அங்கு ஒரு நாகப்பாம்பு சத்தம் கேட்டு தலையை உயர்த்தி பார்த்துக்கொண்டிருந்தது. பாதுகாவலர் “ஒருத்தரும் சத்தம் போடாதீர்கள்”அதுவே போய் விடும் என்று சொன்னார். இவர்கள் அப்படியே அமைதியாய் நின்றனர். பாம்பு சற்று நேரத்தில் தலையை தாழ்த்தி அங்கிருந்த புதருக்குள் ஓடி மறைந்தது. ‘அப்பாடி’ என்று அனைவரும் பெருமூச்சு விட்டனர்.


      அடுத்து இவர்கள் நடையை தொடர அந்த இடத்தில் பாதை அகலமாய் இருந்தது. அதை சுட்டிக்காட்டிய பாதுகாவலர் இது காட்டு இலாகாவின் ஜீப் வரும் வழித்தடம் சொல்லி விளக்கமளித்தார். சட்டென ஒரு இடத்தை கீழே உட்கார்ந்து கூர்ந்து பார்க்கவும், அவர் பின்னால் வந்த அனைத்து மாணவ மாணவிகளும் என்னவென்று கீழே பார்த்தனர். அவர் ஸ்…ஸ் என்று எல்லோரையும் சமிக்ஞை செய்து இரகசிய குரலில் “இது புலி நடந்து போன காலடி தடம் பாருங்கள் இந்த சின்ன தடங்கள் அதோட குட்டிகள். இவ்வளவுதான் சொல்லி முடிப்பதற்குள் நான்கைந்து மாணவ மாணவிகள் அங்கேயே மயக்கம் போட ஆரம்பித்து விட்டனர்.


      இவர் சட்டென்று எழுந்து ஒருத்தரும் பயப்படவேண்டாம், குட்டியோடு இருக்கும்போது அது வெளியே வராது, அதனால் வேகமாக என் பின்னால் வாருங்கள் என்று சொல்லி விரைவாக நடக்க ஆரம்பித்தார்.திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அனைவரும் வேகமாக இவரை பின் தொடர்ந்தனர்.


      இது தான் நீங்கள் தங்கிகொள்ளும் இடம் “ சுற்றிலும் அகல குழி வெட்டி நடுவில் ஒரு பங்களா போல இருந்தது.அந்த பங்களாவில் இரண்டு அலுவலர்கள் இவர்களுக்க்காக சமையல் செய்து தயாராய் இருந்தனர். இவர்கள் களைப்பாய் வந்ததால் வேகம் வேகமாக கைகால் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்.


      இரவு பாதுகாவலர் சொன்னார் எல்லோரும் போய் படுத்துக்கொள்ளுங்கள், நான் இடையில் உங்களை எழுப்பினால் மட்டும் எழுந்து வாருங்கள், என்று சொல்லி

ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் இன்னொரு புறமும் தூங்க சென்றனர். நடு ஹாலில் வகுப்பாசிரியரும், பாதுகாவலரும், இரண்டு அலுவலர்களும் உட்கார்ந்து கொண்டனர்.


      நடு இரவில் மாணவ மாணவிகளை எழுப்பிய அலுவலர்கள், ஒருவரும் சத்தம் போடாமல் வாருங்கள் என்று பங்களாவின் அமைக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னலை திறந்து விட்டார். அதில் அவர்கள் பார்த்த காட்சி அப்படியே புல்லரிக்க வைத்தது.


      ஒரு புறம் காட்டெருமைகள் நின்று கொண்டிருக்க , யானைக்கூட்டம் ஒன்று இந்த புறம் நின்று கொண்டிருந்தது. அலுவலர் அந்த பக்கம் இருக்கும் ஜன்னலில் பார்க்க சொல்ல அங்கு மான்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது.அவர்களுக்கு அவைகளை பார்க்க நேரம் போனதே தெரியவில்லை.


      காலை எல்லோரும் எழுந்து தயாரானவுடன் அலுவலர்கள் செய்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் காட்டு வழியே நடந்த பின் அங்கு மனிதர்கள் வசிக்கும் குடிசைப்பகுதிக்கு வந்தனர்.


      அங்குள்ள மனிதர்கள் சுருள் சுருள் முடியுடன் பார்ப்பதற்கு ஆப்பிரிக்கர்கள் போல இருந்தனர். பாதுகாவலர் இவர்களை பற்றி சொன்னார், இங்கு காடர்கள், முதுவர், இருளர் என்று பல பிரிவுகள் உண்டு. இன்னும் உள்ளே சென்றால் முதுவர்களை பார்க்கலாம், இருளர்கள் தனியாக அதே போல் வசிப்பார்கள், அதன் பின் இவர்களை அந்த மலை வாழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த அவர்கள் இவர்களுக்கு தினை மாவும், தேனும் கொடுத்தனர். ருசித்து சாப்பிட்டனர். பின் அவர்களுக்கு வனத்துறை சார்பாக படகு சவாரி கூட்டி சென்றார்கள். எல்லாம் முடிந்து வெளியே வர மதிய உணவு தயார் என்று அறிவித்தார்கள்.


      சாப்பிட்டு விட்டு அனைவரும் இளைப்பாறினர். அதற்குள் இவர்கள் வந்த வாகனம் அங்கு வந்து சேர வகுப்பாசிரியரும் மாணவ மாணவிகளும் பாதுகாவலருக்கும் அங்குள்ளோருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றனர்.


      அப்பொழுதுதான் வகுப்பாசிரியர் பாதுகாவலரை அழைத்து வந்து உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லுகிறேன். இவர் காட்டு வாசியாக இருந்தாலும் டெல்லியில்  வனத்துறையின் பெரிய அதிகாரி என்றவுடன் மாணவ மாணவிகள் வாயை பிளந்து நின்றனர். நம்முடன் காட்டுக்குள் சாதாரண மனிதனாய் வந்தவர் மிகப்பெரிய அதிகாரியா?


      இது மட்டுமல்ல இன்னொன்றையும் சொல்கிறேன், இவர் நம்முடைய பள்ளி மாணவர் கூட. அதனால்தான் நம்முடைய பள்ளி மாணவகளுக்காக சிரமப்பட்டு இந்த அனுமதியை வாங்கி உங்களை மகிழ்வித்தார்.


      மாணவர்கள் அவரை சுற்றிக்கொண்டு ஆட்டோகிராப் வாங்கவும், அவரோடு கையை குலுக்கி பேசவும் போட்டி போட்டனர். கடைசியாக மாணவர்களுக்காக ஒரு சில வார்த்தைகள் பேசும்படி கேட்டுக்கொண்டார்கள்.


      மாணவ மாணவிகளே நான் காட்டுக்குள் பிறந்து வளர்ந்தவன் என்பதால் சொல்கிறேன், மிருகங்கள், பறவைகளை நேசியுங்கள், ஒவ்வொரு மரம் செடி கொடிகளை நேசியுங்கள், இவைகளும் நம்மை போல உயிர் வாழும் ஜீவன்கள்.

இதை என்றும் மறவாமல் இருந்தாலே போதும். “பெஸ்ட் ஆப் லக்”

      மாணவ மாணவிகள் அவருக்கு தங்கள் மரியாதையை தெரிவிக்க அனைவரும் ஒரு சல்யூட் வைத்து அவர்கள் வந்த வாகனத்தில் ஏறினர்.

No comments:

Post a Comment