மாலாவுக்கு எதையாவது சாப்பிடணும் போல இருந்திச்சு. அவ சமையக்கட்டுப் போனா. அங்கே மூடி வச்ச நிறயப் பாத்திரங்கள் இருந்திச்சு. அவ அத
ஒவ்வொண்ணாத் திறந்து பாத்தா. அதில எல்லாம் எதுவும் இருக்கல. கடைசியா ஒரு பாத்திரத்தை எடுத்தா. அது நல்ல இறுகி மூடியிருந்துச்சு. அந்தப் பாத்திரத்தோட மூடியைப் பலமாத் திறந்து பாத்தபோது அவளோட முகம் மலர்ந்திச்சு.
ஆமா. அதில சீனி இருந்திச்சு. சீனிண்ணா சீனி அதையாவது சாப்பிடுவோம் அப்படீண்ணு கொஞ்சம் எடுத்து வாயிட்ட மாலா ஒரு நொடியில ஆ ஐய்யோ
கத்த ஆரம்பிச்சுட்டா. அவ மறுபடியும் பாத்திரத்தை எடுத்துக் கவனமாப் பாத்தபோதுதான் அதில எறும்புக இருக்கறது தெரிஞ்சுது. பாத்திரம் இருந்த
எடுத்துக்கு எங்கிருந்தோ எறும்பக வரிசையா வந்திட்டிருந்துச்சு. நாலஞ்சு எறும்புக அவளோட நாக்கில கடிச்சு வச்சிருச்சு. அவளுக்கு வலி எடுத்திச்சு. வலி எடுக்க எடுக்க கூடவே கோபமும் வந்துச்சு.
"ஏய் எறும்புகளா, என்னை கடிச்சு வச்சிட்டீங்கல்ல உங்கள கொல்லாம விடமாட்டேன் பாருங்க...'' அப்படீண்ணு சொல்லி சுத்தும்முத்தும்
பாத்தா. அங்க ஒரு தீப்பெட்டி இருந்திச்சு. அத கையில எடுத்தவ ஒரு நிமிஷம் யோசிச்சா... ஐயோ சமையல் கட்டில ஏரிவாயு இருக்கு. தீப்பிடிச்சிருச் சுண்ணா வெடிச்சிரும் வேண்டாம்ணு சொல்லி தீப்பெட்டியை கீழே வச்சிட்டு வீட்டுக்குப் பின்னாடி ஓடினா.
அங்க ஒரு இடத்தில எறும்பு பொடிப் பொட்டலம் இருந்திச்சு . அந்தப் பொட்டலத்தைக் கையில எடுத்தாளோ இல்லையோ அச் அச்ணு தும்மத்
தொடங்கீட்டா.
ஐய்யய்யோ இது கையில எடுத்தவுடனே தும்மினா இதை சமையலறையில் தீவினா என்ன ஆகறது... வேண்டாமப்பாணு சொல்லீட்டு அந்தப் பொட்டலத்தை அங்கேயே வச்சா. மறுபடியும் சமையக்கட்டுக்கே வந்தா. அங்கே ஒரு குப்பியில் கொஞ்சம் மண்ணெண்ணெய் இருந்திச்சு. ஆமா இத எறும்பு மேல ஊத்தினா எல்லா எறும்பும் செத்துப்போயிரும். அப்படீண்ணு சொல்லீட்டு அந்தக் குப்பியைக் கையிலெடுத்தா.
வ்வே... என்ன இது இப்படி நாறுது... இத சமையல் கட்டில ஊத்தினா நாலு நாளானாலும் நாற்றபோகாதப்பா அப்படீண்ணூ சொல்லிட்டு
அதையும் அங்கேயே வச்சா.
எரும்பு கடிச்சது இன்னும் வலிக்குதே அதுகள கொல்லாம விடக்கூடாது என்ன பண்ணலாம். அவ தீவிரமா யோசிச்சா. இங்... அதுதான் சரியான வழி. எறும்புகளும் சாகும். சமையலறையும் சுத்தமாகும். தண்ணியெ நல்லா கொதிக்க வச்சு அதுக மேல ஊத்தினா போதும். மாலா வேகவேகமா ஒரு பாத்திரத்தில தண்ணியெடுத்து அடுப்பு மேல வச்சா..
மாலா... மாலா... அப்படீண்ணு யாரோ கூப்பிடற சத்தம் கேட்டுச்சு. அவ வெளியே வந்து பாத்தா அங்கே யாருமேயில்லை. மறுபடியும் அடுப்பைப் பற்ற வைக்கப் போனா அப்போ மறுபடியும் மாலா மாலாண்ணு யாரோ கூப்பிடற சத்தம் கேட்டிச்சு. அவ கூர்ந்து பார்த்த போது அவளோட கையில ஒரு எறும்பு தலையைத் தூக்கிட்டு நிக்குது ஏய் என்னை மறுபடியும் கடிக்கப்போறயா... உன்னை என்று கொல்லப் போனா அப்போ மாலா என்ன கொல்லறதுக்கு முன்னாடி என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு கொண்ணுக்கோ... அப்படீண்ணு எறும்பு பேசிச்சு.
ஒ நீதான் என்ன கூப்பிட்டியா? சரி நீ என்ன கேள்வி கேட்கப் போற கேளு நான் பதில் சொல்றேன் மாலா எறும்புகிட்டே பேசினா.
நீ என் எங்க சாப்பாட்டை எடுத்தே... எறும்பு கேள்வி கேட்டுச்சு.
என்னது எங்கம்மா வாங்கிட்டு வந்தா சீனி உங்க சாப்பாடா? எங்கம்ம
எங்களுக்குக்காக வாங்கிட்டு வந்த சீனி எப்படி உங்க சாப்பாடாகும்? மாலா
எதிர்க்கேள்வி கேட்டா.
சரி நான் வரிசையா கேள்வி கேட்டுக்கிட்டே வர்றேன் நீ பதில் சொல்கிட்டே வா பாப்போம். கடைசியில யார் ஜெயிக்கிறாங்கண்ணு பாத்திருவோம் அப்படீண்ணு சொல்லிட்டு எறும்பு வரிசையா கேள்வி கேட்கத் தொடங்கிச்சு.
உங்க அம்மாவுக்கு எங்கிருந்து சீனி கிடைச்சு.
கடையிருந்து.
கடைக்கு எப்படி சீனி வந்துச்சு
கரும்பாலையிருந்து
கரும்பாலைக்கு எங்கிருந்து சீனி வந்திச்சு?
கரும்பு வயல்லிருந்து
வயல்ல கரும்பு வெளையணும்ணா என்னென்ன வேணும்?
தண்ணீ வேணும், காத்து வேணும் வெளிச்சம் வேணும்.
தண்ணீ, காத்து வெளிச்சம் எல்லாம் உனக்கு மட்டுமா சொந்தம்?
இல்ல எல்லாருக்கும் சொந்தம்தான்
எல்லாருக்கும் சொந்தம்ணா எங்களுக்கும் சொந்தம்தானே?
ஆமாம் உங்களுக்குதான்... மாலா மெதுவாகச் சொன்னா. எறும்பு அவள கேள்வி
கேட்டு மடக்குதுங்கறது மெல்ல மெல்ல புரிய ஆரம்பிச்சுது.
எங்களுக்கும் சொந்தமானதைப் பயன்படுத்தி வௌயற கரும்புல எங்களுக்கும் ஒரு பங்கு தரவேண்டாமா? அந்தப் பங்குதான் இந்தச் சீனிண்ணு நெனச்சுக்கோ.
இதுக்கு மேலயும் உனக்கு எங்களக் கொல்லணும்ணு தோனிச்சுண்ணா கொண்ணிடு...
எறும்பு சொல்லிநிறுத்திச்சு.
நான் ஒரு பெரிய பாவம் செய்யப்போனேன். நீதான் என்ன தடுத்திட்டே. நீ எவ்வளவு புத்திசாயா இருக்கே.
நீ எங்கள முட்டாள்கள்ணு நெனச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லையே...
இனி ஒருநாளும் இந்த மாலா உங்களைக்கொல்ல மாட்டா. அதுமட்டுமல்ல நா சாப்பிடற சாப்பாட்டில் ஒரு பகுதியை உங்களுக்கும் தர்றேன். சரியா..
நீ ரொம்ப நல்ல பொண்ணு'" எறும்பு அவளப் பாராட்டிச்சு.
No comments:
Post a Comment