பழைய தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்கறதுக்கும் விக்கிறதுக்கும்ணே அந்தத் தெரு இருந்திச்சு. பழைய செய்தித்தாள்கள், புத்தகங்கள், அட்டைப்பெட்டிகள், குப்பிகள், தகரம்.. அப்படீண்ணு அந்தத் தெரு முழுக்க பழைய பொருட்கள் நெறஞ்சிருக்கும்.
ஆனா இக்கடைகளுக்கு இடையிலெ வேறொரு கடை இருந்துச்சு. அது ரொம்ப அழகான கடை. அந்தக் கடையிலெ எங்கு பார்த்தாலும் கூடுகள் தொங்கும். அங்கங்க கூண்டுகள் இருக்கும். கூடுகளுக்குள்ள பச்சைக்கிளிகள் மைனா, வாத்து, கோழி புறா போன்ற பறவைகள் இருக்கும் கூண்டுகளுக்குள்ளே நாய், முயல், பூனை, போன்ற வளர்ப்பு விலங்குகள் இருக்கும். அந்தக் கடைகளோட எதிரிலதான் என்னோட வீடு இருந்திச்சு.
நான் ஜன்னல் வழியா எப்போதும் அந்தக் கடையைத்தான் பாத்திட்டிருப்பேன்.
என் ஜன்னருந்து பார்த்தா வீட்டு வாசல். வாசலுக்கு அடுத்த சாலை. சாலைக்கு அப்புறம் இந்தக் கடை.
எப்போது பார்த்தாலும் பறவைகளோடு கீச் கீச் ஓலி கேட்கலாம். கூடவே நாய்களின் குறைக்கும் சத்தம் கேட்கலாம். உடம்பெல்லாம் புசுபுசுண்ணு முடியிருக்கற நாய்கள்லிருந்து நம் வீடுகளைச் சாதாரணமாகப் பாக்கற நாய் வரைக்கும். உயரம் குறைவா ஆனா நீளமா இருக்கற நாயிருந்து கன்றுக்குட்டி மாதிரி பெரிய உருவத்தோடு இருக்கற நாய்கள் வரைக்கும் அந்தக் கடையில இருக்கு.
இந்தக் கடைக்காரர் இதுகள எங்கிருந்து புடிச்சிட்டு வர்றாருணு நான் பலதடவை யோசிச்சிருக்கேன். நெறயப் பேர் காட்டிலிருந்து புடிச்சிட்டு வந்து இந்தக் கடையில கொண்டுவந்து கொடுக்கிறாங்க. அதுமாதிரி வீட்டில நாய் குட்டி போட்டதுண அதுகளப் பாத்து வளக்கறது கஷ்டம்ணு இந்தக் கடையில கொண்டுவந்து கொடுத்துடுவாங்க. பெரிய பெரிய கார்ல வர்றவங்க அத வாங்கிட்டுபோவாங்க.
இந்தக் கடையில இருக்கற விலங்குகள் பறவைகளைப் பாத்திட்டே இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்ச பொழுது போக்கு. கடையில் எத்தனை கூண்டு தொங்குது? ஒவ்வொரு கூண்டிலயும் எந்தெந்த பறவை இருக்கு எந்தெந்த விலங்குக இருக்குண்ணு எனக்குத் தெளிவாத் தெரியும். பக்கத்துப் பக்கத்து கூண்டுகளில இருக்கற பறவைக தங்களுக்குப் பேசிக்கும். ஒரு பறவை மொதல்ல கத்தும். அதைக்கேட்டு அடுத்தது கத்தும். அந்த ரெண்டும் கத்தறக் கவனமாக் கேட்டா அவங்க பேசிக்கறாங்கண்ணு நமக்கு நல்லா புரிஞ்சுக்கலாம்.
இன்னும் நல்லாக் கவனிச்சுக் கேட்ட அவங்க எதைப் பத்திப் பேசறாங்கண்ணுகூட தெரிஞ்சுக்கலாமோண்ணு எனக்குத் தோணும். அதுமாதிரித்தான் விலங்குகளோடு கூண்டுலயும் நடக்கும். வெலங்குகளோட கூண்டுல மூணு நாலு முயலுகளோ அல்லது நாய்க்குட்டிகளோ ஒண்ணா இருக்கும். அவங்க எவ்வளவு நேரம்தான் கூண்டுக்குள்ள சும்மா இருக்குங்க. அப்பப்ப வௌயாடத் தொடங்கும் அதைப் பாத்திட்டேயிருந்த சிரிப்பு வரும்.
சில நேரங்கள்ல பக்கத்து பக்கத்து கூடுகளிருக்கிற பறவைகளில ஒண்ண யாராவது வாங்கிட்டுப் போயிருவாங்க. அப்ப கடையில இருக்கிற அந்த இன்னொரு பறவை ரொம்ப சோகமா இருக்கும். அத பாக்கும்போது என் மனசு ரொம்ப வலிக்கும்.
வாங்கிட்டுப் போன பறவைக்கு அவங்க நெறைய சாப்பாடு குடுப்பாங்க, அன்பா பாத்துக்குவாங்களே அப்படீண்ணு நெனச்சு நான் மனசைத் தேத்திக்குவேன். எவ்வளவுதான் சாப்பாடு குடுத்தாலும் சுதந்திரமா வானத்தில பறக்க வேண்டிய பறவைகளை இப்படி கூண்டில அடைச்சு வக்கறது நல்லதில்லதான். ஆனா இந்த மனுஷங்க அதத்தானே பண்றாங்க. என்ன செய்யறது?
அப்படித் தொடர்ந்து அந்தக் கடையையே பாத்திட்டிருந்த போது நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சேன். கடையோட வலது பக்க மூலையில இருக்கற கூண்டில இருக்கற பறவை, ஒரு பச்சைக்கிளி ரொம்ப நாளா கடையிலேயே இருக்கு. அதை யாருமே வாங்கறதில்லே. அதுக்குப்பக்கத்திருக்கற கூண்டு பல தடவை மாறிருச்சு. குறஞ்சது ஆறு பறவைகளாவது மாறியிருக்கும். ஆனா அந்த ஒரு கூண்டு மட்டும் நாலஞ்சு மாசமா அங்கேயே இருக்கும். அத யாருமே வாங்கறதில்லை. நான் மேலும் ஒரு மாசம் அதையே கவனிச்சு வந்தேன். ம்ஹூம் யாருமே வாங்கறதேயில்ல. பாவம் அந்தப் பறவை. அது தன்னைப் பத்தி என்ன நெனச்சுக்கும்? என் என்னை யாருமே வாங்கிட்டுப் போறதில்லைண்ணு நெனக்காதா?
ஒரு நாள் என் மனசுல ஒரு எண்ணம் தோணிச்சு. ஏன் நான் அத வாங்கக் கூடாதுண்ணு தோணிச்சு. நான் என் ஊண்டியல எடுத்தேன். எனக்கு கிடைக்கற பணத்தையெல்லாம் நான் இதிலதான் போட்டு வைப்பேன். இருக்கற பணத்தை எண்ணிப்பாத்தபோது இருநூறு ரூபா இருந்திச்சு.
நான் பணத்தையும் எடுத்திட்டுக் கடைக்குப்போனேன். "கடைக்காரரே பச்சைக்கிளிகளுக்கு என்ன வெல அப்படீண்ணு கேட்டேன்.
இருநூறு ரூபாய் தம்பி அப்படீண்ணு உக்காந்த எடுத்திருந்து எந்திருக்காமலே பதில் சொன்னாரு.
இதோ இந்த வலதுபக்க மூலையில இருக்கற பச்சைக்கிளியைக் குடுங்க. அப்படீண்ணு கேட்டேன். அவரு "இந்தப் பறவை வேண்டாம் தம்பி. வேறொண்ணு வாங்கிக்கோ?'' அப்படீண்ணாரு.
ஏன் அதுக்கு என்ன? அதோட ஒரு காலு ஊனம். அதுதான் இல்ல. எனக்கு அதுதான் வேணும். இதுக்குண்ணா நீ நூறு ரூபாய் கொடுத்தாபோதும் கடைக்காரரு சொன்னாரு. இந்தாங்க இருநூறுபாயே வைச்சுங்க. கால் ஊனம்ணு சொன்னாலும் பச்சைக் கிளி பச்சைக்கிளி தானே எனக்கு அந்தப் பறவைதான் வேண்டும். எடுத்துக்கு குடுங்க அப்படீண்ணேன்.
கடைக்காரரோடு மொகத்தில ஆச்சரியம் கோடுகளாக தெரிஞ்சுச்சு. நூறு ரூபாய்க்குத் தர்றேன் சொன்னா வேண்டாம் இருநூரு ரூபாய் தர்றேன்
சொல்றானே இந்தப் பையன்ணு சொல்லிட்டு அவருக்கு ஆச்சரியம். அவரு பணத்தை வாங்கி பெட்டியில போட்டுட்டு கூண்டு எடுத்துத்தர எந்திரிச்சாரு. கூண்டையும் எடுத்துத் தந்தாரு.
நான் அந்தப் பச்சைக்கிளையைப் பாத்தேன். அது மகிழ்ச்சியாலே கூண்டுக்குள்ளே அப்படீயும் இப்படியும் நடந்திச்சு. என்ன பாத்து மகிழ்ச்சியாக கத்திச்சு. நான் ஒரு கையாலே கூண்டையும் புடிச்சுகிட்டு மறுகையாலே என்னோட ஊன்று கோலையும் பிடிச்சு மெல்ல மெல்ல நொண்டிகிட்டே வீட்டுக்கு வந்தேன்.
கடைக்காரரு என்னையே பாத்திட்டிருக்கிறதா எனக்குத் தோணிச்சு.
No comments:
Post a Comment