இந்தக் கதையில மூணு நெருங்கிய நண்பர்கள் இருக்காக்காங்க. அவங்க யார் யார்ங்கறதைக் கேட்டா அவங்க எப்படி நண்பர்கள் ஆனாங்கண்ணு எல்லாம் கேட்கக் கூடாது. கதையில கேள்வி இல்லைண்ணு உங்களுக்குத் தெரியுமில்லையா?
தக்காளி, வெங்காயம், குச்சி ஐஸ் இவங்க மூணுபேருதான் அந்த நெருங்கிய நண்பர்கள்.
வெங்காயத்தோடு மாமாதான் பூசணிக்காய். பூசணிக்காயை வெங்காயம் பூசணி மாமா பூசணி மாமாண்ணுதான் கூப்பிடும். ஒருநாள் வெங்காயம் தன்னோட நண்பர்கள் கிட்ட "எனக்கு பூசணிமாமாவைப் பாக்கணும்ணு தோணுது. நான் நாளைக்குப் புறப்படலாம்ணு இருக்கேன்'' அப்படீண்ணு சொல்லிச்சு.
"அப்படியா, நாங்களும் வர்றோம். நாம மூணுபேரும் சேர்ந்தே போவோம்'' அப்படீண்ணு சொல்லிச்சு குச்சி ஐஸ்.
"தனியாப் போனா பயணம் சப்பாக இருக்குமேண்ணு நெனச்சிட்டிருந்தேன். ரொம்ப நன்றி நம்ம மூணுபேரும் பேசீட்டே போகலாம்.'' வெங்காயம் சந்தோஷமாச் சொல்லிச்சு.
அடுத்த நாள் மூணு பேரும் பயணத்துக்குப் புறப்பட்டாங்க. மொதல்ல நடக்கும்போது நல்ல சுகமாத்தான் இருந்திச்சு. ஆனால் கொஞ்ச நேரமானதும் கால் வலிக்கத் தொடங்கிச்சு. ஒடம்பு வேர்த்திச்சு. எங்காயாவது கொஞ்சம் ஒய்வு எடுத்தாப் பரவாயில்லைணு மூணு பேருக்கும் தோணிச்சு.
"இத பாருங்க, அந்தப் பக்கமாக குளிர்ந்த காற்று வீசுது. அங்கு குளம் இருக்கலாம்ணு நெனக்கிறேன். வாங்கண்ணு தக்காளி கூப்பிட்டுச்சு. கொஞ்ச தூரந்தான் நடத்திருப்பாங்க அதுக்குள்ள ஒரு குளம் தெரிஞ்சுச்சு. மூணுபேரும் ஓடிப்போய் குளக்கரையிருந்த மரநிழல்ல உக்காந்தாங்க.
"நல்ல சுகமா இருக்கல்ல'' வெங்காயம் சொல்லிச்சு. "இந்தக் குளத்திலெ குளிச்சா இருக்கிற கொஞ்ச நஞ்ச களைப்பும் ஓடிப்போயிடும,
குளிக்கலாமாண்ணு தக்காளி கேட்டுச்சு. "ஆகா... நல்லாச் சொன்னே குளிக்கலாமா?'' ஐஸ் ஆர்வமாக கேட்டிச்சு.
"ஐய்யய்யோ... நீ குளிக்கக்கூடாது. நீ தண்ணீலெ ஏறங்கனா செத்துப்போயிடுவே. ஞாபம் வச்சுக்கோ. நாங்க ரெண்டுபேரும் குளிக்கப்போறோம் எங்களுக்கு எதுவும் ஆகாது. ஆனா நீ எச்சரிக்கையா இருக்கணும். குளக்கரையோட பக்கத்துக்குக்கூட வந்திராதே என்னா...'' வெங்காயம் எச்சரிக்கை செய்திச்சு.
குச்சி ஐஸோட முகம் அப்படியே வாடிப்போச்சு. அது மனசில்லா மனசோடு வெங்காயத்தைப் பாத்து சரிங்கறமாதிரி தலையாட்டிச்சு.
அப்புறம் தக்காளியும் வெங்காயமும் தொப்புத் தொப்புண்ணு தண்ணீலெ குதிச்சுக. தண்ணீரை வாரி ஒருத்தர் மேல ஒருத்தர் அடிச்சுக்கிட்டாங்க. தண்ணீரில முங்கி முங்கி எழுந்தாங்க. அவங்க போடற கும்மாளத்தைப் பாத்து குச்சி ஐஸ்ஸுக்கு தானும் குளிக்கணும்ணு ஆசை வந்திச்சு. அதுவும் தண்ணீலே குதிச்சுது. அவ்வளவுதான். பாவம் குச்சி ஐஸ் அதோட ஒடம்பு தண்ணீரில கரைய ஆரம்பிச்சுது. கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு அது செத்துப் போச்சு. குளிச்சு முடிச்சு வெளியே வந்த வெங்காயமும் தக்காளியும் எங்கே குச்சி ஐஸ்ஸைக் காணோமேண்ணு சுத்தும்முத்தும் தேடிச்சுக.
"ஐயோ அங்க பாரு வெறும் குச்சி மட்டும் தண்ணீல மிதக்குது. நாம சொன்னதைக் கேட்காம ஐஸ்ஸும் குளிக்க தண்ணீர்ல ஏறங்கிருக்கு. ஐய்யய்யோ... என் நண்பன் செத்துட்டானே அப்படீண்ணு தக்காளி ஒஒ.. ண்ணு ஆழ ஆரம்பிச்சுது. அழுதுது அழுதுது. நிறுத்தாம அழுதுது. அழுதுகிட்டே நடந்தது.
அப்போ சாலையில ஒரு காளை வண்டி வந்திச்து, கண்ணில தண்ணியோட நடந்த தக்காளிக்கு கண்ணு சரியாத் தெரியல. அது காளை வண்டியோட சக்கரத்தில பட்டு நசுங்கிப் போச்சு. அவ்வளவுதான் வெங்காயம் ஆழத்தொடங்கிச்சு. அழுதுது. அழுதுது நிறுத்தாம அழுதுது. அழுதுகிட்டே பூசணிமாமாவோட வீட்டுக்குப் போயிருச்சு.
பூசணிமாமா, நீ என் அழுகற. அழுகையை நிறுத்து. என்ன நடந்தது சொல்லுண்ணு கேட்டுது. குச்சி ஐஸ் செத்துப் போனப்ப அழுறதுக்கு தக்காளியும் நானும் இருந்தோம். தக்காளி செத்துப்போனப்போ அழறதுக்கு நான் இருந்தேன். நான் செத்துப்போனா அழுறதுக்கு யார் இருங்காங்கண்ணு சொல்லிட்டு நிறுத்தாம அழுதது.
பூசணிமாமா ஒரு நிமிடம் யோசிச்சாரு. கவலைப்படாதே. உன்னை யாரு கொல்லறாங்களோ அவங்க அழுவாங்க அப்படீண்ணு சொல்லிச்சு.
அதனாலதான் வெங்காயத்தை யார் ஊரிச்சாலும் அவங்க அழறாங்க. நீங்க வெங்காயத்தை உரிச்சிருக்கீங்களா... உரிச்சுப் பாருங்க நீங்களும் அழுவீங்க
No comments:
Post a Comment