மேட்டுப்பாளையம் என்னும் சிற்றூரில் கன்னையன் என்பவன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு சுகுமாரன்,வளர்மதி, என இரு குழந்தைகள். இருவரும் முறையே ஏழாவது வகுப்பும், மூன்றாவது வகுப்பும்,அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியிலேயே படித்து வந்தார்கள்.அவர்கள் வசித்து வந்த ஊர் பெரிய நகரமும் இல்லாமல் சிறிய கிராமமும் இல்லாமல் நடு நிலையாக இருந்தது. அங்குள்ள பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை இருந்தது.
சுகுமாரன் ஒரளவு நன்றாக படிப்பான். வளர்மதியும் நன்றாக படிப்பவள். இருந்தாலும் கன்னையன் ஒரு ஏழை. அவன் அங்குள்ள விவசாய தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்பவன். அவன் மனைவியும் அவனுடன் கூலி வேலைக்கு செல்பவள் இவர்களால் இருவரையும் இந்தளவுக்கு படிக்க வைப்பதற்கே மிகவும் துன்பப்பட்டார்கள். எப்படியாவது இவர்கள் இருவரையும் படிக்க வைக்க வேண்டும் என்று அடங்காத ஆவலுடன் இருந்தார்கள். ஆனால் அவர்களின் வறுமை அந்த குழந்தைகளை மேலும் படிக்க் வைக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் மெய்யப்பன். அவர் மிகவும் கண்டிப்பானவர். பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வந்து விட வேண்டும். உடைகள் சுத்தமாக போட்டிருக்க வேண்டும். இரணடையும் கண்டிப்பாக கடைபிடிப்பதில் உறுதியானவர்.
சுகுமாரனும், வளர்மதியும், சில நேரங்களில் தோட்டத்தில் பூ பறிக்கும் வேலைக்கு செல்வர். விடியற்காலையில் பூ பறிக்க ஆரம்பித்து, எட்டு மணி வரை பூ பறித்து கொடுத்தால் ரூபாய் இரண்டு கிடைக்கும். இது அவர்கள் குடுமபத்திற்கு பேருதவியாக இருக்கும். அதன் பின்னரே இருவரும் வீட்டுக்கு வந்து பள்ளிக்கு கிளம்புவார்கள்.
இதனால் சில நேரங்களில் நேரம் தவறி பள்ளிக்கு செல்வதுண்டு.இதனால் பள்ளி தலைமையாசிரியர் மெய்யப்பனிடம் தண்டனைகள் பெற்றதுண்டு.
தலைமையாசிரியர் மெய்யப்பனிடம் அந்த ஊர் ஆட்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஊர் பிரச்சினைகள் எதுவானாலும் ஊர்க்காரர்கள் தலைமையாசிரியரிடம் ஒரு வார்த்தை கேட்டுத்தான் செய்வார்கள்.வாத்தியார் என்ன சொல்றாரு? என்று கேட்பார்கள். ஒரு நாள் சுகுமாரனும், அவன் தங்கையும் விடியற்காலையில் தோட்டத்தில் "பூ" பறிக்க பாதை வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வழியில் 'கை கடிகாரம்' ஒன்று கிடந்தது.இருவரும் ஆச்சர்யத்துடன் அதை எடுத்து பார்த்தனர்.கடிகாரம் விலை உயர்ந்ததாய் இருந்தது.ஆனால் இவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.ஆனால் கடிகாரத்தின் அழகு அவர்களை கவர்ந்தது.
இதை வீட்டுக்கு கொண்டு போகலாமா என்று சுகுமாரனின் தங்கை கேட்கவும், வேண்டாம், இதை யாரோ இந்த வழியா போனவங்க கையில இருந்து கழண்டு விழுந்திருக்கணும்.நாம காலையில ஸ்கூலுக்கு போய் நம்ம வாத்தியாருகிட்ட கொடுத்து விடுவோம், என்று சொல்லிவிட்டு அதை தன் கால் சட்டையில் போட்டுக்கொண்டு இருவரும் 'பூ" பறிக்க தோட்டத்துக்கு சென்று விட்டனர்.
பூ பறித்து கொடுத்து கூலியை பெற்றுக்கொண்டு வந்த இருவரும் அவர்கள் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, அவசர அவசரமாய் பள்ளிக்கு கிளம்பி விட்டனர்.ஆனால் அந்த கை கடிகாரத்தை வீட்டில் குளிப்பதற்கு முன் ஒரு இடத்தில் வைத்த சுகுமாரன் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அதை மறந்து விட்டான்.
இவர்கள் பள்ளிக்கு சென்ற பின் தான் ஞாபகம் வந்தது கை கடிகாரத்தை வீட்டிலே விட்டு வந்தது.சரி நாளை எடுத்து வந்து கொடுத்து விடலாம் என்று சமாதானம் செய்து கொண்டான் சுகுமாரன்.
அன்று அந்த ஊரில் போலீஸ் வண்டிகள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தன. பள்ளி நடந்து கொண்டிருக்கும்பொழுதே அந்த வண்டிகள் செல்வதை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த்னர்.மாலை வீட்டிற்கு வந்த பின்னால் அவ்ர்கள் அப்பா கன்னையன் தான் சொன்னார், நம்ம பக்கத்து ஊர்ல இருக்கற கோயில்ல இருந்து சிலைகளை யாரோ கடத்திட்டு போயிட்டாங்களாம்.அதனாலதான் போலீசு நம்ம ஊரு வழியா வந்துட்டும் போயிட்டும் இருக்கு.
காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பும் போது ஞாபகமாய் அந்த 'கை கடிகாரத்தை" எடுத்து புத்தக பையில் போட்டுக்கொண்டான். வகுப்பு ஆசிரியரிடம் தான் பாதையில் கண்டெடுத்த கை கடிகாரத்தை கொடுத்தான். அவர் அவனையும் அழைத்துக்கொண்டு தலைமையாசிரியர் மெய்யப்பனிடம் அழைத்து சென்று இந்த கடிகாரத்தை கொடுத்து, விவரத்தை தெரிவித்தார்.
நன்கு யோசித்த மெய்யப்பன், உடனே சுகுமாரனையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று இந்த கை கடிகாரத்தை ஒப்படைத்து, விவரங்களை கூறினார், காவல் துறை அதிகாரி சுகுமாரனை பாராட்டி அந்த கடிகாரத்தை பெற்றுக்கொண்டார். அதன் பின் சுகுமாரன் அந்த நிகழ்ச்சியை மறந்து விட்டான்.
சுமார் மூன்று மாதங்கள் ஓடியிருக்கும், ஒரு நாள் தலைமையாசிரியர் சுகுமாரனை அழைப்பதாக பள்ளி பணியாள் வந்து சொல்லவும் வகுப்பு ஆசிரியர் சுகுமாரனை தலைமையாசிரிடம் அனுப்பினார். எதற்கு கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே அவர் அறைக்குள் நுழைந்தவன் அங்கு தலைமையாசிரியருடன் அன்று “கை கடிகாரத்தை” பெற்றுக்கொண்ட காவல் அதிகாரியும் இருந்தார்.அவர் இவனை கண்டவுடன் எழுந்து அவன் கையை பற்றி குலுக்கு "வெல்டன் பாய்" உன்னால ஒரு திருட்டு கும்பலையே பிடிக்க முடிஞ்சது, என்று அவன் கையை குலுக்கினார்.
இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை, பிரமை பிடித்தவன் போல் நின்று கொண்டு இருந்தவனை தலைமையாசிரியர் அழைத்து அன்னைக்கு நீ ஒரு “கை கடிகாரத்தை” இந்த அதிகாரிகிட்ட கொடுத்தியில்லயா? அது பக்கத்து ஊர்ல கோயில் சிலை திருடுன கூட்ட்த்தில இருக்கற ஒருத்தனோடது.இவங்க அந்த கடிகாரத்தை வச்சே அந்த கூட்டத்தையே பிடிச்சுட்டாங்க.அதுக்குத்தான் உன்னை பாராட்டி விட்டு போகணும்னு வந்திருக்கறாங்க.அது மட்டுமல்ல அடுத்த வாரம் ஒரு விழா வச்சு உங்க அப்பா, அம்மா,உன் தங்கச்சி எல்லாத்தையும் கூப்பிட்டு பாராட்ட போறாங்க. சொல்ல சொல்ல சுகுமாரனுக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.
அடுத்த வாரத்தில் நடந்த விழாவில் சுகுமாரனுக்கு பாராட்டு மட்டுமல்ல, அவனுக்கும், அவன் தங்கைக்கும் எவ்வளவு படிக்க முடியுமோ அந்த அளவுக்கு அரசாங்கமே படிக்க வைக்கும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்து விட்டார்.கன்னையனுக்கும் அவன் மனைவிக்கும் இதை விட ஆனந்தம் வேறேன்ன வேண்டும்.
No comments:
Post a Comment