கண்ணணூர் என்னும் ஒரு ஊரில் குஞ்சம்மாள் என்னும் பாட்டி வாழ்ந்து வந்தார்கள், பாட்டிக்கு எப்பொழுதும் பயம் தான், தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நிறைய சேமித்து வைக்க வேண்டும் என்று அந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு அநியாய வட்டிக்கு விட்டு சம்பாத்தித்தாள். சரியான முரட்டு பேர்வழியாக இருந்தாள். ஒரு நாள் வட்டி கொடுக்க தாமதமானாலும் உடனே அபராத வட்டி போட்டு வாங்கி விடுவாள். இதனால் அங்குள்ள ஏழைகள் மிகுந்த துன்பபட்டனர்.
அங்குள்ள ஏழை மக்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். இந்த பாட்டிக்கு ஏன் இந்த பேராசை, ஏழை மக்களிடம் வட்டி வாங்கி யாருக்கு சேமிக்கிறாள் என்று வருத்தப்படுவார்கள் ஒரு நாள் அந்த ஊருக்கு எத்தன் ஒருவன் வந்தான், அவன் பாட்டியை பற்றி கேள்விப்பட்டவன், பாட்டியை ஏமாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்காக அவனுடைய கூட்டாளிகள் இருவரை மாறு வேடத்தில் ஜமீந்தார் போல செல்ல சொன்னான்.
இந்த வீட்டுல யார் இருக்காங்க? வாசலில் யாரோ இருவர் வந்து கேட்கவும், வீட்டிற்குள் இருந்த பாட்டி வெளியே வந்தாள். நல்ல உடையணிந்த இருவர் வெளியில் நிற்பதை பார்த்தவள் நீங்கள் யார்? எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாள். நான் பக்கத்து ஊர் பொன்னையாபுரம் ஜமீந்தார்,இந்த ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கி போட ஆசைப்படுகிறேன், அதற்கு உங்களை மாதிரி பெரிய மனிதர்கள் இரண்டு பேரிடம் இங்கெல்லாம் என்ன விலை விற்கிறது என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
பாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி, இரண்டு பெரிய மனிதர்கள் தன்னிடம் வந்து விவரம் கேட்கிறார்கள் என்றவுடன் வாங்க உள்ளே, என்று மரியாதையுடன் வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.உள்ளே சென்ற இருவர்களுக்கும் குடிப்பதற்கு நீர் மோர் கொடுத்து மற்ற விவரங்களை பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அம்மா அம்மா, என்று வெளியே ஒரு குரல் கேட்டது, வெளியே வந்த பாட்டி, அங்கு எத்தன் கையில் சிறு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தான். யாரப்பா நீ ? உனக்கு என்ன வேண்டும்? பாட்டி கேட்க அம்மா நான் வெளியூர்க்காரன், என் பெண் திருமணத்திற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது, அதனால் என் மனைவியின் நகைகளை வைத்து உங்களிடம் பணம் பெற்று செல்லலாம் என்று வந்தேன்.
அவன் தான் கொண்டு வந்திருந்த பையை விரித்து அதற்குள் இருந்த நகை களை காட்டினான். நகைகள் பளீரென்று மின்னின. பாட்டிக்கு உடனே நம்பிக்கை வரவில்லை, நான் பணம் கொடுப்பதாக உனக்கு யாரப்பா சொன்னார்கள்? இந்த ஊரில் எல்லோரிடமும் கேட்டு பார்த்தேன், அவர்கள், எல்லோரும் உங்களை பார்க்க சொன்னார்கள், என்று பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டிற்குள் இருந்த இருவரும் வெளியே வந்தனர்.
இவன் கையில் இருந்த நகைகளை, வெளியே வந்த இருவரும் இங்கே கொடப்பா பார்க்கலாம் என்று வாங்கிப்பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பாட்டிக்கு அதை பார்த்தவுடன், விட்டால் பணம் கொடுத்து இவர்களே வாங்கி கொள்வார்கள் போலிருக்கிறது என்று நினைத்தாள். ஏம்ப்பா இதை விலைக்கு கொடுக்கிறாயா? அந்த இருவரில் ஒருவன் கேட்க, இவன் யோசித்தான், பணம் அடகு வைக்க கட்டுப்படியாகலையின்னா வித்துடறது அப்படீன்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.நகைகளை கையில் வாங்கி பார்த்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர், எப்படியும் குறைச்சு பேசி எல்லாத்தையும் வாங்கிடலாம், அவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு உடனே சபலம் தட்டியது, தானே அந்த நகைகளை வாங்கிக்கொள்ளலாம், என்று முடிவு செய்தவள், இதற்கு எவ்வளவு ஆகும் என்று அவர்களை கேட்டாள், அவர்கள் திரும்பி ஏம்பா இந்த நகைகளை பத்தாயிரத்துக்கு வாங்கிக்கறோம், அப்படியே கொடுத்திடறியா? அவன் சற்று நேரம் யோசித்தவன் கொஞ்சம் கூட போட்டு கொடுங்க என்று கொஞ்சினான், அதெல்லாம் முடியாது, அந்த பணத்துக்கு கொடுக்கறதுன்னா கொடு, இல்லையின்னா கிளம்பு என்று விரட்டவும், சரிங்க என்று தலையாட்டினான்.
பாட்டிக்கு ஒரே சந்தோசம் உள்ளே ஓடி சென்று சேர்த்து வைத்திருந்த பணத்தில் பத்தாயிரத்தை எடுத்து வந்து கொடுத்தவள் அந்த நகைகளை வாங்கி பார்த்து ஆனந்தபட்டாள். நகைகளை விற்றுவிட்ட எத்தன் மெல்ல நடையை கட்டினான், சற்று நேரத்தில் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த இருவரும், தாங்கள் வந்து பார்க்கிறோம், என்று சொல்லி விட்டு கிளம்பினர்.
பாட்டி அவர்களை அனுப்பி விட்டு அந்த நகைகளை மீண்டும் எடுத்து பார்த்தாள், உற்று உற்று பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் சற்று சந்தேகம் வர அதை கொஞ்சம் தேய்த்து பார்த்தாள், உள்ளிருந்த ஈயம் பல்லை காண்பித்தது.தான் ஏமாந்து விட்டோம் என்று தெரிந்தவுடன் குய்யோ முய்யோ என்று கூக்குரலிட்டாள்.
பாட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள், பாட்டி ஏமாந்தற்காக வெளியில் வருத்தப்பட்டதாக காண்பித்து கொண்டாலும் உள்ளுக்குள் சந்தோசப்பட்டு கொண்டனர். பிறரை துன்புறுத்தி சம்பாதித்து சேர்த்து வைக்கும் பணம் அவர்களை வேதனைப்படுத்தி விட்டோ அல்லது ஏமாற்றி விட்டோ, அடுத்தவரிடம் சென்று விடும். அங்கும் அந்த பணம் நிற்காமல் அடுத்தவர் மாற்றி அடுததவர்களிடம் பறந்து கொண்டே இருக்கும். நேர்மையாகவோ, அல்லது உழைத்தோ சம்பாதிக்கும் பணம் என்றென்றும் உண்மையுடன் நம்மிடம் இருக்கும்.
No comments:
Post a Comment