Ads Here

Wednesday, May 2, 2018

தரையில் பூத்த தாமரை


Image result for தரையில் பூத்த தாமரை

நாலஞ்சு வருஷமா மழையே பெய்யலே.

ஏரி குளம் எல்லாம் வற்றி வறண்டு போச்சு. ஆறு கெணறெல்லாம் காய்ந்து கறுகிப் போச்சு. செடி கொடி எல்லாம் காஞ்சு நிக்குது. பலமா காத்தடிச்சா அப்படியே காத்திலெ பறந்து போகுது.

ஆ.. நான் சொல்ல மறந்துட்டேனே. அன்னக்கெல்லாம் தாமரையும் தரையிலெ தான் இருந்தது.

தாமரை தலையை திருப்பி அப்படியும் இப்படியும் பார்த்தது. எல்லாரும் செத்திட்டிருக்காங்க. நானும் அப்படி ஆயிருவனா அப்படீண்ணு தன்னோட ஒடம்பைப் பாத்தது.

தண்டெல்லாம் மெலிஞ்சு கெடக்கு.  எலையெல்லாம் வாடி வதங்கி தலை சாய்ஞ்சு கெடக்குது. நல்ல பலமா காத்து வீசினா நானும் சாகப்போறேன் கடவுளே அப்படீண்ணு நெனச்சது.

கடவுளே காப்பாத்து அப்படீண்ணு மனசுருகி வேண்டிச்சு.

அன்னக்கு சாயங்காலம் ஓர் அதிசயம் நடந்திச்சு. வானத்தை மேகம் மூடிச்சு, மின்னல் மின்னிச்சு.  இடி இடிச்சுது. மழை கொட்டோ கொட்டுண்ணு கொட்டிச்சு.

ஆகா தாமரைக்கு சந்தோஷம் தாங்க முடியலே. எவ்வளவு தண்ணி குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணியெ குடிச்சது. ஒடம்பிலெ புதுத் தெம்பு வந்துச்சு.

நல்லா நிமிர்ந்து நிண்ணுச்சு. மற்ற செடிகளும் உயிர் பொழச்சு சந்தோஷமா நிக்குதுக.

ஆனா வேறு யாரும் செய்யாத ஒண்ண தாமரை செஞ்சுது. அது தண்ணீரை கூப்புட்டு நன்றி சொல்லிச்சு.

ஏய் தண்ணீரே நீ என் உயிரெ காப்பாத்தீட்டே. உனக்கு எப்படி நன்றி சொல்றதுண்ணே தெரியலே. அப்படீண்ணு சொல்லிச்சு.

தண்ணீருக்கு ஆச்சரியமாப் போச்சு. எத்தனையோ வருஷமா நான் இந்த வேலையைச் செய்யறேன். யாருமே எனக்கு நன்றி சொன்னதில்லே. நீதான் மொதல்ஆளு. உன்னை எனக்கு ரொம்பப் புடிச்சு போச்சு'' அப்படீண்ணு சொல்லுச்சு.

"எனக்கும்தான்" தாமரையும் சொல்லிச்சு. ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாயிட்டாங்க. 

தண்ணீ சல சலண்ணு ஓடி வரும். தாமரையைத் தாலாட்டும். தாமரையும் உடம்பை ஆட்டி அப்படியும் இப்படியும் ஆடும். தாமரைப் பூமேல தண்ணீரை விசிறியடிக்கும். தாமரையோட ஒடம்பு புல்லரிச்சுப் போகும்.

அப்படி இருக்கும் போது மழை நிண்ணு போச்சு. தண்ணீ ஏரி கொளத்திலே வாழப் போச்சு. வாய்க்காலிலெ தண்ணீ ஓடறதும் நிண்ணு போச்சு.

தாமரைக்குத் தண்ணீரப் பாக்கணும்போல இருந்துச்சு. தண்ணீருக்குத் தாமரய பாக்கணும்போல இருந்துச்சு. ஆனா என்ன வழி வீசற காத்துகிட்ட செய்தி சொல்லியனுப்பலாம்ணு பாத்தா காத்து மரத்து மேலேயும் பாறை மேலயும் மோதி செய்தி சிதறிப் போயிருமே என்ன செய்யறதுண்ணு நெனச்சு வருத்தப்பட்டது.

ரெண்டு பேரும் மழை பெய்த போது அவர்கள் வெளையாடியதை நெனச்சிட்டே இருந்தாங்க. அப்படியே ஆறு மாசம் போச்சு. மறுபடியும் மழை பெய்தது.

அவ்வளவுதான் தண்ணி சல சலண்ணு ஓடி வந்துச்சு.

"ஒன்ன பாக்காம என்னாலெ இருக்க முடியலெ. வா என்னோடு வா. என் வீட்டிலே வாழலாம்" தண்ணீ கூப்பிட்ச்சு.

"ஆமா நானும் அதையேதான் நெனச்சுகிட்டு இருக்கேன். உன்னப் பாக்காம என்னாலேயும் இருக்க முடியாது''  தாமரை தண்ணி கூட அதோடு வீட்டுக்குப் போச்சு.

தண்ணிகூடவே இருக்க முடிவு செஞ்சுது.

தண்ணியும் தாமரையும் ரொம்ப நெருக்கமானவங்க. தண்ணீக்கு ஏதாவது ஒண்ணுன்னா தாமரையாலெ தாங்க முடியாது. தாமரைக்கு ஏதாவது ஒண்ணுன்னா தண்ணியாலே தாங்க முடியாது.

தண்ணீ வத்தும் போது பாத்திருக்கீங்களா. தாமரையும் வளர்ச்சியைக் கொறச்சுக்கும். தண்ணீ கூடும்போது அதுக்குத் தகுந்த மாதிரி தாமரையும் வளர்ந்துக்கும்.

நண்பர்கள்னா இவங்களப் போல இருக்கணும் இல்லையா?

No comments:

Post a Comment