அவர் கடலுக்கு மேலே படுத்தபடி மடிக்கணினியிலே வேலை செஞ்சிட்டிருந்தாரு.
நல்ல இதமான காத்து வீசிச்சு, மேகத்தாலே மூடப்பட்டதாலே கண்ணக் குத்தாத சூரிய வெளிச்சம் இருந்துச்சு. சின்னச் சின்ன அலக வந்து அவரு தாலாட்டிச்சு. ஆகா நல்ல சுகமா இருந்துச்சு. அதனாலே அவரு கடலுக்கு மேலே படுக்க வந்தாரு. மின்னஞ்சல் திறந்து தனக்கு வந்திருக்கற கடிதங்களைப் படிச்சாரு. பேஸ்புக் பாத்தாரு அவரு படுத்திருந்த காற்றடைத்த படுக்கை கடலலயிலே தொட்டில் மாதிரி
மெல்ல ஆடிட்டிருந்திஞ்சு. உல்லாசத்துக்கு உல்லாசமாச்சு அதே நேரத்தில் வேலைக்கு வேலையுமாச்சு.
தன்ன மறந்து பேஸ் புக் பாத்திட்டிருந்தவர் போதும்படிச்சதுண்ணு நெனச்சாரு. இந்த சுகமான வேளையிலே கொஞ்சம் பாட்டுக் கேட்கலாம்ணு
மடிக்கணினியிருக்கிற பியானோவை திறந்தாரு. திரையிலெ கருப்பு வெள்ளை கட்டங்கள் தெரிஞ்சுது. அதிலெ விரலாலெ மெல்ல மெல்ல தொட்டாரு. காதுக்கு இதமான மெல்லிசை அதிலிருந்து வெளியே வந்திச்சு. அவருக்குப் புடிச்ச ஒரு பாட்டை வாசித்தவரு, கடலலையில இடிட்டிருந்தவரு மெல்ல கண்களை மூடி விரல்களை ஓடவிட்டாரு. நல்ல தூக்கம் வந்ததும் கணினியை அணைச்சு வச்சாரு.
கொஞ்ச நேரத்திலே அப்படியே உறங்கிப்போயிட்டாரு.
அப்ப ஒரு பெரிய அல வந்திச்சு. அந்த அல கடல் மேலே மெதந்திட்டிருந்தவரை அப்படியே பொரட்டி போட்டிருச்சு. அவ்வளவுதான் அவரோட மார்பு மேல இருந்த மடிக்கணினி கடலுக்குள்ளே விழுந்திருச்சு.
ஐய்யோ, நான் சொல்ல மறந்துட்டேன். கடலல மெதந்திட்டு வேலை செய்யற காலத்திலே தண்ணீலே விழுந்தாலும் கேடு வராத கணினியைக்
கண்டுபிடிச்சிருப்பாங்கல்ல. அவருகிட்ட இருந்த மடிக்கணினியும் தண்ணிக்குள்ளே விழுந்தாலும் ஒண்ணும் ஆகாது.
இதோ அந்த மடிக்கணினி அப்படியே கீழே கீழே போய்ட்டிருக்கு. ஆடி ஆடி மெதுவா அடிலே அடிப்பகுதியை நோக்கிப் போயிருட்டிருக்கு. அது ஒரு குட்டி
மீனு மேலே மோதிச்சு. அவ்வளவுதான் ஒரு கூட்டம் குட்டி மீனுக அப்படியே அதச் சுத்தி சுத்தி வந்திச்சு என்னடா இது புதுசா இருக்குதே... அப்படின்னு அத கடிச்சு தின்னப் பார்த்தது.
"இது மாதிரி ஓண்ண நாம இதுக்கு முன்னாடி பாத்ததேயில்ல அல்ல'' அப்படீண்ணு அடுத்த மீனுகிட்ட கேட்டுச்சு. அந்த நேரத்திலே அங்கே ஒரு சுறா மீனு வரவும் குட்டி மீனுகயெல்லாம் குபுக்குணு ஓடி ஓளிஞ்சிச்சுக. என்னடா இங்க நடக்குது போய்ப்பாக்கலாம் ஒரு டோல்பின் அங்க வந்துச்சு.
"இது என்னாண்ணு உனக்குத் தெரியுமா?'' அப்படீண்ணு சுறா மீனு கேட்டிச்சு.
"சரியாத் தெரியாது. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ பாட்டுப் பாடறத நான் கேட்டேன். அது இதிருந்து வந்திருக்கும்ணு நெனக்கிறேன்
அப்படீண்ணுச்சு.
"ஆகா அப்படியா, எனக்கும் பாட்டுக் கேக்கணுமே என்ன பண்ணலாம் அப்படீண்ணு'' கேட்டிச்சு.
"இருங்க நான் முயற்சி பண்றேண்ணுட்டு மடிக்கணினியை மூடவும் தெறக்கவும் செய்திச்சு. ஆனால் அதிலிருந்து சத்தம் எதுவும் வரலே.
அப்போ அங்கே எட்டு கைகொண்ட ஆக்டோபஸ் வந்துச்சி. அது கிட்டே டோல்பின் "இது பாட்டு பாடுற கருவிண்ணு தெரியுது. ஆனா எப்படீ
இயக்கறதுண்ணு தெரியலே'' அப்படீண்ணுட சொல்லிச்சு.
"அப்படியாண்ணு சொல்லிட்டி ரெண்டு கையாலெ அத தூக்கிப்பாத்துட்டு வேற கைகளால சில பொத்தான்களை அழுத்தி பாத்துச்சு. ம்ஹூம் அந்த மடிக்கணினி கண்ண தெறக்கல.
"அட எல்லோரும் கொஞ்சம் வெலகுங்க. நான் இது மாதிரி நெறைய பாத்திருக்கிறேன். கரையிலே நெறயப்பேரு இது வச்சிருக்காங்க'' அப்படீண்ணு
உரிமையாச் சொல்ச்சு அங்க வந்த நண்டு.
"ஆமா, நண்டு சொல்றது சரியாயிருக்கும். ஏண்ணா, நம்ம யாராலேயும் கரைக்குப் போய் அங்க என்ன நடக்குதுண்ணு பாக்க முடியாதில்லே'' அப்படீண்ணு டோல்பின் சொல்லிச்சு.
நண்டு மடிக்கணினியில இருக்கிற பொத்தான்களை நல்லா கவனமாப் பாத்திச்சு. இங்க பாருங்க இந்த வட்டமா இருக்கிற பொத்தானை அழுத்திணும் அப்படீண்ணு தன்னோட கொடுக்கு போல இருக்கிற கையாலே அத அழுத்திச்சு. அவ்வளவுதான்.
திரையெங்கும் வெளிச்சம் பரவிச்சு. அதிலெ பியானோவோட பொத்தான்கள் தெரிஞ்சுச்சு. நண்டு அத ஒவ்வொண்ணா அழுத்திச்சு. அப்ப கணினியிருந்து
ஸா... ரீ... அப்படீண்ணு சத்தம் வந்திச்சு.
"ஏய் நண்டு, அத ஆக்டோபஸ்கிட்டே குடு அதுக்கு எட்டு கையிருக்கு. அது நல்ல வாசிக்கும், வேகமாகவும் வாசிக்கும்'' சுறா மீனு கொஞ்சம் அதட்டலா சொல்லிச்சு.
"நீ சொல்றது சரிதாண்ணு'' சொல்லிகிட்டே கணினியை ஆக்டோபஸ்கிட்டே கொடுத்திச்சு.
ஆக்டோபஸ் ரெண்டு கையாலெ கணினியைப் புடிச்சுகிட்டு மீதியிருக்கிற ஆறு கையாலெ கருப்பு வெள்ளையா தெரியற பொத்தான்கள அழுத்தச் தொடங்கிச்சு.
அவ்வளவுதான் அதிலிருந்து பாட்டு ஒழுகி வந்திச்சு. அதக் கேட்டதும் டோல்பின் தலை ஆட்டத் தொடங்கிச்சு. சின்னச் சிறகுகளை அசைச்சுகிட்டே சர்ணு மேல போயி சர்ணு கீழே வந்து, கணினியை சுத்தி சுத்தி வந்து வௌயாடத் தொடங்கிச்சு.
சுறா மீனு வாயைப் பொளந்துகிட்டு மூணு அண்டா தண்ணியை ஒண்ணா குடிச்சுகிட்டு வாயை மூடிகிட்டே ரெண்டு பக்கம் வழியாகவும் பீச்சியடிச்சு.
நண்டு தண்ணிக்கு மல்லாந்து நீந்தி அப்படி தலைக்கு மேலே இருக்கற கண்ணாலே கணினியைப் பாத்துகிட்டே காலை ரெண்டையும் ஆட்டிச்சு.
பயந்து வெலகின குட்டிமீனுக மேகம்போல் அங்க வந்து ஒரு சுத்து சுத்திட்டு தங்களோட மகிழ்ச்சியைத் தெரிவிச்சது.
அதையெல்லாம் பாத்த ஆக்டோபஸ் நல்ல வேகமாக பொத்தான்கள அழுத்தச் தொடங்கிச்சு. ஆகா கடலுக்கு அடியில் நடக்கிற பாட்டுக்கச்சேரி நீங்க பாத்திருந்தீங்கண்ணா நீங்களும் தண்ணில குதிச்சு கும்மாளம் போடத் தொடங்கியிருப்பீங்க.
No comments:
Post a Comment